Ayothi prayer what happened tamil nadu hr and ce

அயோத்தி சர்ச்சை: அறநிலையத் துறைக்குள் என்ன நடக்கிறது?

அயோத்தி என்றாலே சர்ச்சைகளும் சலசலப்புகளும் தொடர் கதையாக தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 22) அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ராமர் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு ஆங்காங்கே கட்சி சார்பற்ற பலரும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். Ayothi prayer what happened tamil nadu

அதேவேளை தமிழ்நாடு பாஜக இதை தங்களது முழுமையான அரசியல் கருவியாக கையில் எடுத்து ஒவ்வொரு கோவிலிலும் அன்னதானம் மற்றும் கூட்டு பிரார்த்தனை சிறப்பு வழிபாடுகள் என்று கட்சி ரீதியாகவும் ஏற்பாடுகள் செய்தனர்.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பாஜக சார்பில் அனுமதி கோரி விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 19ஆம் தேதி மாலை தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு அந்தந்த நிர்வாக அதிகாரிகள் அல்லது நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இருந்து ஒரு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

கோயில் அர்ச்சகர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, “ஜனவரி 19 ஆம் தேதி வெள்ளி மாலை இ.ஓ. ஆபீசில் இருந்து போன் பண்ணினார்கள். 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது தமிழ்நாட்டில் பாஜகவினர் கோவில்களில் புகுந்து பிரச்சனை செய்ய திட்டமிடுகிறார்கள்.

அதனால் அன்று வழக்கமான பூஜைகளை தவிர வேறு எந்த சிறப்பு பூஜைகளையும் ராமருக்கு செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல… சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட இனிப்பு வகைகளைக் கூட அன்று கோவில்களில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம்.

அவ்வாறு சர்க்கரை பொங்கல் படைக்குமாறு கேட்டுக் கொண்ட உபயதாரர்களிடம் இந்த விஷயத்தை சொல்லிவிடுங்கள் என்றும் அறநிலை துறை அதிகாரிகள் வட்டாரத்தினர் கூறினார்கள். இதுபற்றி எங்களது வாட்ஸ் அப் க்ரூப்புகளில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்தத் தகவல் பாஜகவில் இருக்கும் அர்ச்சர்கள் மூலமாக அக்கட்சி நிர்வாகிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

மறுநாள் சனிக்கிழமை எங்களைத் தொடர்புகொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள் நிலைமை பற்றி விசாரித்தனர். அப்போது நாங்கள், ‘உபயதாரர்கள் வருத்தப்படுறாங்க. அவங்கள்ல பலர் பிஜேபியே இல்லை.

காங்கிரஸ், திமுககாரங்க கூட இருக்காங்க’ என்று சொன்னோம். அதற்கு அதிகாரிகள், ‘முடிஞ்சவரைக்கும் பிரச்சினை இல்லாம பாத்து செய்யுங்க. ரெகுலர் உபயதாரர்னா சீக்கிரமே அபிஷேகத்தை முடிச்சுடுங்க. யாராவது போட்டோ எடுத்து மேலே அனுப்பிட்டாங்கன்னா எங்களையும், உங்களையும்தான் கேட்பாங்க’ என்று பதில் சொன்னார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே பாஜகவினரும் ஜனவரி 22 ஆம் தேதி பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, அது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தத் தகவலையும் சேர்த்து பாஜகவினர் கையில் எடுத்துக் கொண்டார்கள்” என்கிறார்கள் அர்ச்சகர்கள் தரப்பில்.

ஜனவரி 21ஆம் தேதி இந்த விவகாரம் பற்றிய செய்தி நாளிதழ் ஒன்றில் பிரசுரமாக அதை மேற்கோள் காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்று தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாடுகள் நடத்தவும் சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யவும் தமிழ்நாடு அறநிலையத்துறை போலீசை வைத்து மிரட்டுகிறது என்று குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமன், எந்தெந்த இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சில இடங்களையும் வெளியிட்டார்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சார்பிலும் கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாடுகள் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

ஆனாலும் இன்று கூட பாஜகவினரின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் மீண்டும் இன்று கூறியுள்ளார். ‘தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 வீடுகளுக்கு மேல் இல்லாத கருநிலம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் கூட அயோத்தி ராமர் கும்பாபிஷேக நேரடி ஒளிபரப்பை பார்க்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை. எல்.இ.டி. சப்ளையர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.

மேலும், தமிழக பாஜக செயலாளார் வினோஜ் செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு அவசர வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நாம் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சில அறங்காவலர்களிடம் பேசியபோது, “ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்திய போது, அதை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஒளிபரப்பிட பாஜக செய்த ஏற்பாடுகளுக்கு தமிழ்நாடு அறநிலையத்துறை அனுமதி அளித்தது. இந்த முறை அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு பாஜக என்ற கட்சியை தாண்டியும் பல்வேறு தரப்பினராலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காங்கிரஸ்காரரே அன்று சிறப்பு பூஜைகளுக்கு ஒரு ராமர் கோவிலில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகளின் அனுமதி மறுப்பு காரணமாக அவர் அந்த நிகழ்ச்சியை கைவிட இப்போது பாஜக தலையீட்டுக்குப் பிறகு மீண்டும் அந்த நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் யாருடைய உத்தரவை பெற்று இப்படி ஒரு வாய்மொழி அறிவுறுத்தல்களை அர்ச்சகர்கள் தரப்பினருக்கு கொடுத்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இப்படி சொன்னால் அது அரசியல் ரீதியாக வெடிக்கும் என்று பாஜகவுக்கே சாதகமாகும் என்று தெரிந்தும் சில அதிகாரிகள் இந்த வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளனர். எனவே அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரத்தில் அறநிலையத் துறைக்குள் என்ன நடந்தது என்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்கிறார்கள்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அயோத்திக்கு ஹனுமான் என்னை அழைத்தார்: சிரஞ்சீவி

வேலைவாய்ப்பு: என்.எல்.சி – யில் பணி!

ராமர் கோவில் திறப்பு: விழாக்கோலம் பூண்ட அயோத்தி

Ayothi prayer what happened tamil nadu

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts