சுயாட்சிக் கொள்கை 2.0 !

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஸ்ரீராம் சர்மா

தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் சமீபத்தில் நிகழ்ந்தேறிய அவலமொன்று அரசியலரங்கை துணுக்குறச் செய்துவிட்டது.

அருகருகே அமர்ந்து விரோதம் பாராட்டிய படியும் ஆளுக்கு ஆள் எழுந்தடிக்கப் பாய்வதுமாக சொந்த கட்சியின் நெஞ்சகத்துள் கத்தி சொருகிக் கொண்டிருந்தன அந்த இரட்டைத் தலைமைகள். 

அதிர்ச்சியளித்த அந்தக் காட்சிகள் இருபெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்று தன்னளவில் நீர்த்துப் போய்க் கொண்டிருப்பதைக் காட்டி நிற்க, அதுகுறித்து கவலைப்பட வேண்டியது அந்தக் கட்சியினர்தான் என்றாலும்…

தமிழ்நாட்டுக்கும் – திராவிட சித்தாந்தத்துக்கும் அது நன்மையானதுதானா எனும் பெருங்கேள்வி எனக்குள் எழுந்து உறுத்தி நின்றது. காரணம் உண்டு.

திராவிட சித்தாந்தம் ஏன் தோன்றியது ? அதன் அடி நாதம் என்ன என்பதை புரிந்து கொண்டால் இந்தக் கட்டுரையின் ஆதங்கத்தை உள்வாங்கிவிடலாம்.   

கவனிப்போம் !

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1885 ல் துவங்கி பெரும்பங்கு வகித்தது காங்கிரஸ் கட்சி என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. விடுதலைக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக அது தென்னகம் உட்பட சகல இந்தியத்தையும் ஒன்று பட ஆட்சி செய்து கொண்டிருந்தது.

அதுவே போதுமானதாக இருந்திருக்குமெனில் அன்றைய அரசியலரங்கம் அமைதியானதாகவே நகர்ந்திருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம்’ எனுமொரு கட்சி வீறு கொண்டு எழ வேண்டிய அவசியமற்றுப் போயிருக்கும். 

Autonomy Policy 2.0 Sriram Sharma

எழுந்தது ! 

1949 ல் பேரறிஞர் அண்ணா என்பாரின் சித்தாந்தக் கோட்பாட்டினால் ‘திராவிட முன்னேற்ற கழகம்’ தோன்றியதற்கான முதன்மைக் காரணமாகி நின்றது மாநில சுயாட்சிக் கொள்கை ! 

திராவிடக் கொள்கைகளை தனது நெஞ்சில் சுமந்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ‘அண்ணாவின் மாநில சுயாட்சி முழக்கம்’ என்னுமொரு புத்தகத்தில் தனது பதிப்புரையில்… 

“அண்ணா போன்ற ஒரு தலைவர் ஒரு கருத்தை வலியுறுத்தி சொல்கிறார் என்றால் அவரால் வளர்க்கப்பட்டவர்கள் அந்தக் கருத்துக்கு வடிவம் கொடுப்பதுதான் அவரால் நாங்கள் வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சரியான சான்றாகும் ! “ என்றெழுதி வைத்தார்.

மாநில சுயாட்சி என்பதன் சுருக்கத்தினை இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் அன்றைய உரையின் வழியே இவ்வாறாக கொள்ளலாம்.  

மாநில சுயாட்சி என்பது தனியாட்சி என்பதல்ல. அதனை உறுதிப்படுத்தவே ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி ‘ என்னும் முழக்கம் தமிழக முதல்வரும் கழகத் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுப்பப்பட்டது. மாநிலம் என்பதால் மத்தியில் ஒரு அமைப்பு உண்டென்பதும், கூட்டாட்சி என்பதால் சுயாட்சி அதில் இயங்கும் ஒரு பகுதியே என்பதும் எவருக்கும் தெளிவாகும்”. 

இவ்வளவு தெளிவாக விரித்துரைக்கப்பட்ட பிறகும் மாநில சுயாட்சிக் குரல்களை கலகக் குரல்களாக மடை மாற்றுவது திரிபுவாதமேயன்றி வேறல்ல. 

ஆம், எவருக்கும் எதிரானது அல்ல மாநில சுயாட்சிக் கொள்கை. அது நம் உரிமைகளைக் குறித்த வேட்கையாகும். பிரகடனமாகும்.   

வடக்கையும் தெற்கையும் மோதிக் கொள்ள விடுவது அல்ல சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். சொல்லப் போனால் தேசியத்தோடு ஊன்றிப் பயணப்படத் தேவையான ஊக்கத்தைக் கேட்பதாகும். அங்கீகாரமும் அரவணைப்பும் கிடைத்தாலன்றி அந்த ஊக்கமானது எப்படித் தோன்றும் ? 

இந்திய விடுதலையானது தென்னகத்தின் பங்களிப்பாலன்றி நிகழ்ந்திருக்க முடியாது. 

ஆங்கொரு தாகூர் உளரெனில் இங்கொரு பாரதியார் உண்டே ! ஆங்கொரு வல்லபாய் பட்டேல் உளரெனில் வல்லதோர் வ.வு.சி. இங்குளாரே! பகத்சிங்குக்கு இணையான வாஞ்சிநாதனை தென்னாடும் பெற்றுள்ளதே! 

வடபுலத்தாரின் பிடியில் அன்றைய ஆட்சி அமைந்துவிட்டது என்பதால் கண்ணில் பட்டவர்களை மட்டுமே அறிஞர்கள் எனவும் தியாகிகள் எனவும் அவர்கள் கணக்கெழுதி வைத்த கதையினை இனமானமுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா ?  

வீர சிவாஜி – ஜான்ஸி ராணி போன்ற விடுதலை தியாகங்களை நாங்கள் உளமாற மதிக்கிறோம். 

போலவே, தூத்துகுடி அழகுமுத்துக்கோன் – நெற்கட்டாஞ்சேவல் பூலித்தேவர் – விருபாட்சி கோபாலநாயக்கர் – சிவகங்கை சீமை வெற்றித் தேவதையாம் வேலுநாச்சியார் – மகாரத மருது பாண்டியர்கள் – தீரன் சின்னமலை – கட்டக் கடைசியாக பதினெட்டாம் நூற்றாண்டில் நான்கு போர்களில் நேரிடைச் சமர் கண்டு, 1801ல் நாடுகடத்தப்பட்ட சின்னமருதுவின் மகன் துரைசாமியோடு தாயகம் திரும்பி – ஒரு பங்குனி பௌர்ணமி நாளில் – முதிர்ந்த வயதில் – பழனியம்பதி போகும் பாதையிலமைந்த விருபாட்சி மேட்டு புளியமரம் ஒன்றில் அம்போவென தூக்கிலிடப்பட்ட  நியோகி ஜகன்னாத ஐயர் வரையிலான தென்னகத்தின் வீரத் தியாக வாழ்வுகளை வடபுலத்தாரும் வழிமொழிந்தாக வேண்டும் அல்லவா? 

இது எனது ஆய்வுக்குட்பட்ட தமிழகத்து வரலாறு மட்டுமே. ஆந்திர கேரள கர்நாடக பங்களிப்புகளும் உண்டல்லவா? ஊணுயிர் ஈந்த தென்னகத்துக்கான மரியாதையை இதுகாறும் வடபுலம் செலுத்தியது உண்டா?

விடுதலை அடைந்து எழுபத்தைந்தாண்டுகளான நிலையிலும் தென்னக வாழ்வியலின் ஒரு துமியினைக் கூட வடபுலத்தார் அறியாதிருப்பது குறித்து  நாண வேண்டியது யார் ? மத்தியை ஆண்டவர்களும் ஆள்பவர்களும் தானே ? அதனை ஓங்கி உரைக்கவும் மாநில சுயாட்சி என்பது அவசியமாகிறது  என்கிறேன். 

அறிவுக் கிடங்காய், ஆற்றல் பெட்டகமாய், செய்தொழிலில் சிறந்ததாய் , பற்பல நலத் திட்டங்களுக்கு முன்னோடியாய், தேசிய பொருளாதாரத்துக்கு ஆகச் சிறந்த பங்களிப்பதாய் உயர்ந்து நிற்கும் திராவிடப் பிரதேசத்துக்கு உரிய மரியாதை செலுத்தப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும் என்கிறேன். 

1999ல் நிகழ்ந்த கார்கில் யுத்தத்துக்கு இந்தியாவிலேயே அதிகப் பங்கெடுத்த மாநிலமாக ஐம்பது கோடிகளை அள்ளிக் கொடுத்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களின் உள்ளக் குமுறல் என்னவாக இருந்தது ? 

அநாதிகால மூதாதைகளால் செழுமைப்பட்டு வழி மொழியப்பட்டதான எங்கள் திராவிட உணர்வுகளை கிஞ்சித்தும் உணராத மனப்பான்மையோடு இந்தியம் செயலாற்றுவதாக தோன்றுகின்றது. 

அப்படியான அறியாமை இனிமேலும் தொடருமாயின், எங்கள்  மக்களுக்கான நலத் திட்டங்களை கொண்டு சேர்க்க பல யுகம் ஆகிவிடுமோ எனும் பேரச்சம் எங்களுக்குள்ளது. ஆக, எங்கள் மக்களின் நலனை நாங்களே பேணிக் கொள்ளும் வாய்ப்பினை இந்தியம் எமக்களித்தாக வேண்டும். அல்லவெனில் அதற்கான முயற்சியில் ஊணுயிர் இழந்தும் துணிந்து போராட நாங்கள் உறுதிபட உள்ளோம் என்பதை அரசியல் கண் கொண்டு அறிவித்துக் கொள்கிறோம் என்பதாகத்தானே இருந்தது. 

இந்தியத்தின் மூத்த அரசியல் தலைவரான கலைஞரது அன்றைய உள்ளக் குமுறலுக்கொரு மருந்தினைத் தேட இன்றளவேனும் கிஞ்சித்து முயற்சியேனும் எடுக்கப்பட்டதா ?

Autonomy Policy 2.0 Sriram Sharma

வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை இடுவதும், மொழித் திணிப்புக்கு முனைவதும், திருவள்ளுவருக்கு காவி பூசி கேலி செய்வதும் தானே போலிப் பூசாரிகளின் பொல்லாட்டமாக இருக்கின்றது. ஒரு பெரும் மனிதக் கூட்டத்தின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற பொறுப்பற்றத் தன்மையை எந்த மலையேறி யாரிடம் சொல்லி விடிய வைப்பது ? 

திராவிடப் பேராசானாம் பேரறிஞர் அண்ணாவின் 1967 ஜூன் மாத சட்டமன்ற உரையொன்று சாமானியனுக்கும் விளங்கும்படியாக சுருக்குரைக்கின்றது. 

“திராவிட நாட்டை விட்டுவிட்டோம் என்பதாலேயே அதன் காரணங்களையும் விட்டுவிட்டோமென்பது பொருளல்ல ! மாமியார் வீட்டை விட்டுக் கிளம்பிய கணவன் ‘வியாழக்கிழமை வா’ எனச் சொல்லி விட்டான் என்பதாலேயே அவன் மனைவியை விட்டகன்றுவிட்டான் என்பது பொருளல்ல. அனுபவத்தால் அதனைக் கொண்டு கொள்ள நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம் ! “

அண்ணாவின் அன்றைய உரை இன்றளவும் உயிர்ப்போடு இருப்பது குறித்து மத்தியில் ஆள்பவர்கள் ஆழக் கலைப்பட்டாக வேண்டும். ஆவன செய்தாக வேண்டும். மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசு தானே தவிர மத்திய அரசல்ல என அண்ணா சொன்ன உண்மையின் சாரத்தை உணர்ந்தேற்றுக் கொள்வது நலம்.

கலை கலாச்சாரப் பண்பாட்டளவில் வடக்கும் தெற்கும் பெருமளவில் வேறுபட்டதாக இருக்க அனைத்துக்கும் ஒரே அளவுகோல் என்பது எப்படி சரியானதாக இருக்கும்? அந்த அளவுகோல் மாறும் வரையில் திராவிடத்துக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். வாழும் வழிதேடி அது தன்னளவில் புதுப்பித்துக் கொண்டேதானிருக்கும். 

இந்த நிலையில்தான் இருபெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுக தன்னளவில் பலவீனப்பட்டு நிற்பது கவலை அளிக்கின்றது.

கூடவே, திமுகவுக்கான பாரம் அதிகப்பட்டுப் போயிருக்கின்றது என்பதையும் முரசொலித்து சொல்ல வேண்டியிருக்கின்றது. 

ஆம், முன்னிலும் பலம் பொருந்தியதாய் கட்டமைப்புக்களை  இன்னுமின்னும் வீரியமானதாக்கிக் கொண்டு திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தாக வேண்டிய சுகமான சுமை இன்றைய திமுகவின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கின்றது. 

ஆழ அகல உழைத்தபின் தனது 67 ஆவது வயதில் ஆட்சி கண்டு தன் சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின். தன் நோக்கத்தாலும் தளர்வறியா ஊக்கத்தாலும் இந்திய அளவில் உற்று  நோக்கப்படுமொரு அரசியல் தலைவராக ஒளிர்கிறார். 

Autonomy Policy 2.0 Sriram Sharma

அவருடன் பயணிக்கும் ஐ ஏ.எஸ் அதிகாரிகள் அழுத்தங்களற்ற சுதந்திரமும் ஆன்ற வீரியமும் கொண்டு அயராது செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்டை மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வருவோர்க்கு அடைக்கலம் கொடுக்குமளவுக்கு தமிழ்நாட்டுத் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. வடமாநிலங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு ஜி.எஸ்.டி செலுத்தும் வல்லமையோடு நிற்கின்றது. 

எல்லாம் சரிதான். அதற்குண்டான பரிபூரண பலனை தமிழ்நாடு அனுபவிக்க வேண்டுமெனில் சொந்த மாச்சரியங்களை மறந்து தலைமையின் கரத்தை மேலும் பலப்படுத்த வேண்டியது சார்ந்தோர்க்கான கடமையாகின்றது.

இன்றைய நிலையில் திமுகவை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கும் துரோகச் செயலுக்கு ஈடானதாகி விடுமெனிலது மிகையாகாது. கிஞ்சித்துமதற்கு இடங்கொடுத்து விடலாகாது.

மத்தியில் அசுர பலத்தோடு இருக்கும் பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது. தனக்கான சித்தாந்தங்களை மக்களரங்கில் எடுத்து வைப்பது அந்தந்தக் கட்சிக்கான அடிப்படை உரிமை. அது குறித்து நமக்கெதும் மாச்சரியம் இல்லை. ஆனால், அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடுமானால் மாநில உரிமைகளை தட்டிக் கேட்பதற்கு நாதியற்றுப் போய்விடுமோ என்னும் கவலையுடனே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது. 

மக்களை முன் நிறுத்தி கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம். அதிகாரிகளிடத்தில் அதை எதிர்பார்க்க முடியாது. கவனியுங்கள்.

பாரதப் பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் தமிழ் தமிழ் என்கிறார். காசி தமிழ் சங்கம் நடத்துகிறார். ஆனால், குடியரசு விழாவில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடுதலை வீரர்களை தாங்கிய ஊர்திக்கு அனுமதி மறுத்து திருப்பினார்கள் ஆங்கிருந்த அதிகார கமிட்டியினர். 

காரணம், தமிழ்நாட்டு ஆளுமைகள் குறித்த புரிதல் அவர்களிடத்தில் இல்லை. அவர்களில் பலர் தென்னகமெங்கும் ஒரே மொழிதான் பேசப்படுகிறது என இன்னமும் அபத்தமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

புரிதலற்ற வடநாட்டு அதிகார வட்டத்துக்குள் சென்று சிக்கிக் கொள்ள முடியாது அல்லவா ? அந்தப் புரிதல் அவர்களுக்கு வரக் காலம் பிடிக்கும். அதுவரையில் எச்சரிக்கையாக இருந்து கொள்வதே நமக்கு நன்மை பயக்கும்.  

இன்றைய திமுகவில் திராவிட சித்தாந்தத்தில் ஊறிய இளந்தலைவர்கள் அணிவகுத்து வருவது நம்பிக்கை அளிக்கின்றது. கட்சித் தலைமை சுட்டும் திசையில் ஒன்றிணைந்து கடமையாற்றி வருவது வாழ்த்துதலுக்குரியது. அது இன்னுமின்னும் வலுப்பட்டெழ வேண்டும்.

திராவிடம் என்பது கடவுள் மறுப்பும் பார்ப்பன துவேஷமும் மட்டுமே என்பதான தோற்றம் வடநாட்டு மீடியாக்களால் உண்டாக்கப்பட்டு வருவதை மறுத்தாக வேண்டும்.  

மானுட விடுதலையும் – மாநில உரிமைகளும்தான் திராவிடச் சித்தாந்தத்தின் அடிப்படை என்பதை உலகம் அறிய ஓங்கிச் சொல்லியாக வேண்டும். 

ஆம், இது மாநில சுயாட்சிக்கான 2.0 காலம். சகோதரக் கட்சி ஒன்று சல்லி சல்லியாகப் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட சித்தாந்தத்தை தூக்கிச் சுமக்கும் ஒரே போக்கிடமாக திமுக இருக்கின்றது என்னும் காலக் கடமையை உணர்ந்தாக வேண்டும்.

குறித்துக் கொள்ளுங்கள். 

எனது எழுத்தில் பிரச்சார தொனி ஏதேனும் கண்டடையப்படுமானால் அதற்கான பொறுப்பை அந்த இரட்டையர்களின் சட்டமன்ற காட்சிகள்தான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். 

ஒரு சமூக எழுத்தாளனாக – கலைஞனாக எந்த ஒரு கட்சி பேதமும் எனக்கு இருக்க முடியாது. கூடாது. பட்டதை பட்டென எடுத்துச் சொல்வது மட்டுமே எனது வேலை. அதுவே எனக்கான எல்லை.

தாய் நிலத்தின் பெருமைகளும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டாக வேண்டும் என்பது மட்டுமே இந்தக் கட்டுரைக்கான கவலை.  

கட்டுரையாளர் குறிப்பு:

Autonomy Policy 2.0 Sriram Sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மைக் ஹஸி

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடிதான் அதிமுக- 85 பக்க தீர்ப்பு சொல்வது என்ன?  பாமக டபுள் கேம்- சிறுத்தைகள் ரியாக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.