’சினிமாவின் மறுபக்கம்’ ஆரூர்தாஸ் மறைவு: முதல்வர் இரங்கல்!

அரசியல்

பிரபல சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் இறுதிச் சடங்கு இன்று (நவம்பர் 21) நடைபெற இருக்கிறது.

திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ், சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக சென்னைக்கு வந்தார். 1955ஆம் ஆண்டு தஞ்சை ராமையாதாஸின் உதவியாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், ’வாழவைத்த தெய்வம்’ என்ற திரைப்படத்திற்கு முதன்முதலில் வசனம் எழுதினார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரே நேரத்தில் வசனம் எழுதியது இவரது இன்னொரு சாதனையாகும்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை-வசனம் எழுதிய அவர்,

இறுதியாக 2014ஆம் ஆண்டு, வடிவேல் நடித்து வெளிவந்த ‘தெனாலிராமன்’ என்ற படத்துக்கும் அவர் வசனம் எழுதி இருந்தார்.

auroordas passes away stalin condolence

அவர் தனது திரை உலகப் பயணத்தையும், அதோடு சினிமாவின் மறுபக்கத்தையும் ’தினத்தந்தி’ நாளிதழில்,

‘சினிமாவின் மறுபக்கம்’ என்ற பெயரில் 102 வாரங்கள் தொடர்ந்து தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். இது பின்னாளில் புத்தகமாக வெளிவந்தது. சினிமாவில் எண்ணற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இப்படி, சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்த ஆரூர்தாஸ், சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை மரணம் அடைந்தார்.

அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஆரூர்தாஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன்.

auroordas passes away stalin condolence

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும்.

கதை வசனகர்த்தா ஆரூர்தாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர் தாஸுக்கு, ரவிச்சந்தர் என்ற மகனும், தாராதேவி, ஆஷாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர். அவரது, இறுதிச் சடங்கு இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.

ஜெ.பிரகாஷ்

சென்னைக்குக் காத்திருக்கும் கனமழை: வெதர்மேன் எச்சரிக்கை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *