திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி, விரைவில் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில வாரங்களாகவே தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. திமுகவின் தலைமை வட்டாரம் முதல் தொடக்கநிலை நிர்வாகிகள் வரை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் வட்டாரத்திலும் இதுவே பேச்சாக இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உதயநிதி துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இன்னும் பழுக்கவில்லை” என்று பதிலளித்தார். அதிலிருந்து இந்த விஷயம் இன்னும் வேகமாக பேசப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘பழுப்பது நிச்சயம்… ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில். ’வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவியேற்பார் என்று இளைஞர் அணி வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்’ என குறிப்பிட்டிருந்தோம்.
மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. அதிலே ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் உதயநிதியை துணை முதலமைச்சர் என அழைக்கலாம்’ என்று பேசி பரபரப்பை கூட்டினார். அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவனும் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார் என பேசியிருந்தார்.
இந்த அரசியல் சூழ்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் ஆகஸ்டு 13 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதையடுத்து மாசெக்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் வழக்கமாக திமுக நடத்தக்கூடிய முப்பெரும் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தாலும்… நாளை ஆகஸ்ட் 16ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் பல மாவட்ட செயலாளர்களும் உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசிய போது, “உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என கட்சி நிகழ்ச்சி அளவிலும் பொதுவெளிகளிலும் ஏற்கனவே திமுகவின் முக்கியமான நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சரும் பதில் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இது பற்றிய வலியுறுத்தல்கள் இருக்கலாம். ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறகு உதயநிதியை துணை முதலமைச்சர் என அழைக்கலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு விழாவிலேயே பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் எங்களுக்கு இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றாலும்… ஆகஸ்ட் 19ஆம் தேதி பல அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களும் தங்களது பகுதிகளில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விட்டு சென்னையில் இருப்பது என முடிவு செய்திருக்கிறார்கள்” என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்