ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கிய தமிழகத்தை மையமாகக் கொண்ட வருமான வரித்துறை ரெய்டு, நேற்று (ஏப்ரல் 28) இரவு வரை தொடர்ந்ததாக தகவல்கள் வருகின்றன. திங்கள் தொடங்கி வெள்ளி வரை வாரத்தின் முழு வேலை நாட்களிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் கிடைத்த புதிய புதிய தகவல்களை அடுத்து ரெய்டு செய்த இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. 50 இடங்களில் ஆரம்பித்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்ததுள்ளது. நேற்று இரவு வரை நடந்த ரெய்டு இன்றும் கூட ஒரு சில இடங்களில் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த ரெய்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை மையமாக வைத்தே நடத்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் வருமான வரித்துறை வட்டாரங்களில். அந்த வகையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்திருக்கும் இந்த ரெய்டில் முக்கியமான நபராக பார்க்கப்படுவது ஆடிட்டர் சண்முகராஜ் தான்.
இவர் தான் சபரீசனின் ஆடிட்டர். இதுவரை இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக எதுவும் தகவல் வெளியிடாத நிலையிலும், வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது தகவல்களை கொட்டுகிறார்கள்.
“இந்த ரெய்டின் முக்கியமான ஒரு நபர் என்றால் ஆடிட்டர் சண்முகராஜ்தான். இவர் வட சென்னையைச் சேர்ந்தவர். ராஜூஸ் வகுப்புக்காரர். லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு ஆடிட்டராக இருந்தார். மார்ட்டின் மருமகனான ஆதவ் அர்ஜுனாவுக்கு நண்பரான சண்முகராஜ், அர்ஜூனா மூலமாக சபரீசனுக்கு அறிமுகமாகிறார் சபரீசனின் ஆடிட்டராகவும் ஆனார்.
ஆடிட்டர் சண்முகராஜுக்கு பெங்களூருவில் அலுவலகம் இருக்கிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சபரீசன் வீட்டில் இருந்துதான் ஆடிட்டர் சண்முகராஜ் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரது செயல்பாடுகள் குறித்து கோட்டை அதிகாரிகள் வட்டாரத்திலேயே குமுறல்கள் வெளிப்பட்டன.
இதுமட்டுமல்ல… ‘சபரீசனை விட எனக்கே எல்லாம் தெரியும்’ என்ற ரீதியில் ஆடிட்டர் தன்னை சந்திக்க வரும் அதிகாரிகளிடம் சொல்வதாக தகவல் சபரீசனுக்கே சென்று சேர்ந்திருக்கிறது. அதனால் முதல்வர் வீடு அருகே உள்ள தனது வீட்டுக்கு ரெகுலராக வரவேண்டாம், கூப்பிட்டால் மட்டுமே வாருங்கள் என்று ஆடிட்டரிடம் சொல்லிவிட்டார் சபரீசன்.
அதன் பிறகு அங்கே அடிக்கடி செல்லவில்லை என்றாலும் சபரீசனுக்காக ஆடிட்டரின் வேலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன.
ஆடிட்டர் சண்முகராஜின் சென்னை அண்ணா நகர் அலுவலகத்தில் நடந்த ரெய்டின் போது அவர் பெங்களூருவில் இருந்தார். அங்கிருந்து வருமான வரித்துறை அதிகாரிகளால் சென்னை அழைத்து வரப்பட்டார்.
அதற்கிடையே சென்னையில் ஆடிட்டர் சண்முகராஜ் குழுவில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆடிட்டரான ஈஸ்வரி என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
முதலில் அந்த பெண் ஆடிட்டர் கெடுபிடியாக பேச… யார் யாரை எங்கே சந்தித்தீர்கள் என்ற விவரங்களை வருமான அதிகாரிகள் அடுக்க… அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஆடிட்டர் விசாரணையில் முக்கியமான விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
அதாவது திமுக அரசின் சீனியர் அமைச்சர்களை தவிர பிற ஜூனியர் அமைச்சர்கள் எல்லாம் ஆடிட்டர் சண்முகராஜின் பிடியில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட துறைகளின் பட்ஜெட் என்ன அதில் பார்ட்டி ஃபண்ட் எவ்வளவு வரவேண்டும் என்று ஆடிட்டர் சண்முகராஜ் ஃபிக்ஸ் செய்துவிடுவாராம். இதற்கான தகவல் தொடர்பு அமைச்சர்களின் மகன்கள், உறவினர்கள், துறையில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் மூலமாகவே நடந்திருக்கிறது.
ஆடிட்டர் அலுவலகத்தில் இருந்து மாதத்தில் குறிப்பிட்ட நாளில் போன் போகும். ‘ இன்னும் பார்ட்டி ஃபண்ட் வரலையே’ என்று கேட்பார்கள். அவர்கள் கேட்பதற்குள் பார்ட்டி ஃபண்டை ஆடிட்டர் தரப்பிடம் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் சில முறை ஆடிட்டர் அலுவலகத்திடம் இருந்து போன் வரும்.
அப்படியும் ஃபண்ட் வராவிட்டால் மேலிடத்து முக்கிய பிரமுகரிடம் இருந்து நேரடியாகவே அமைச்சருக்கு போன் போகும். ‘எப்படி போயிட்டிருக்கு…’ என்று சில நிமிடங்கள் விசாரித்துவிட்டு, ‘பார்ட்டி ஃபண்ட் இன்னும் வரலை போலயே…. ஆடிட்டர் சொன்னாரு’ என்று கூறுவார்.
பெரும்பாலும் இந்த கடைசி அழைப்பு வரும் அளவுக்கு அமைச்சர்கள் நடந்துகொள்ள மாட்டார்கள். அந்தத் துறைகளில் இருந்து பெறப்படும் கட்சி நிதி ஆடிட்டர் மூலமாகவே கையாளப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல்களை விசாரணையில் பெற்றிருக்கிறோம் .
ஹைதராபாத்தில் ரெய்டில் ஈடுபட்டிருந்தபோது ஹாட் டிஸ்க் எடுத்துக் கொண்டு தப்பித்தவரை மடக்கி பிடித்து அந்த ஹாட் டிஸ்கை கைப்பற்றியிருக்கிறார்கள் அங்கே ரெய்டு நடத்திய அதிகாரிகள். மேலும் கோவையில் அண்ணா நகர் கார்த்தியின் மாமனார் வீட்டில் நடந்த ரெய்டிலும் ஹாட் டிஸ்க்குகள் சிக்கியிருக்கின்றன. ரெய்டு இப்போதுதான் முடிவை நோக்கி வந்திருக்கிறது. இதற்குப் பிறகான ஆவணப்படுத்தும் பணிகள் இருக்கின்றன. அதையடுத்தே நடவடிக்கைகள் தொடங்கும்” என்று கூறுகிறார்கள் வருமான வரி வட்டாரங்களில்.
இந்த தொடர் ரெய்டில் ஆடிட்டர் சண்முகராஜ் பரபரப்பாக பேசப்படுவதை அறிந்து சில ஜூனியர் அமைச்சர்கள் பதற்றமாகியிருக்கிறார்கள். ஆடிட்டர் தரப்போடு அமைச்சர்களுக்கு நடந்த பரிமாற்றங்களை வருமான வரித்துறை மோப்பம் பிடித்து அடுத்து தங்களை நோக்கி வருவார்களோ என்பதுதான் அமைச்சர்களின் இந்த படபடப்புக்குக் காரணம்,
இதுமட்டுமல்ல… சபரீசன் உள்ளிட்ட விவிஐபிகளுக்கு வெளிநாட்டு வாட்ச்சுகளை வாங்கித் தரும் அமனா ஹாசனையும் வருமான வரித்துறையினர் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது வீட்டில் ரெய்டு நடத்தி, அவரின் கால் டீடெய்ல்ஸ் பற்றி துருவியிருக்கிறார்கள், அப்போது தைவான் நாட்டுக்கு அடிக்கடி பேசியதைக் கண்டுபிடித்து இப்போது தைவான் வரை விசாரணையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இப்படி கிடைக்கும் ஒவ்வொரு தகவலின் அடிப்படையிலும் விசாரணை விரிவாகிக் கொண்டே இருக்கிறது.
இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனிடம் ரெய்டு பற்றி விசாரித்திருக்கிறார். அப்போது சபரீசன், ‘அதெல்லாம் பயப்படுறதுக்கு ஒண்ணுமே இல்லை. எல்லாமே முறையா இருக்கு. கவலைப்பட எதுவுமில்லை’ என்று சொல்லியிருக்கிறார். இதையே தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடமும் முதல்வர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2021 ஏப்ரல் 1 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சபரீசனின் நீலாங்கரை வீட்டிலும், அண்ணா நகர் கார்த்தி வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்தது. ஆனால் அப்போது அங்கு எதுவும் கிடைக்கவில்லை. அது திமுகவுக்கு அரசியல் ஆதாயமாகிப் போனது.
ஆனால் இப்போது ரெய்டே ஐந்து நாட்கள் நீடிக்கிறது. அப்போது திமுக ஆட்சியில் இல்லை, இப்போது ஆட்சியில் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு திமுகவின் நிர்வாகிகளே தங்களுக்குள் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேந்தன்
உதயநிதியின் மாமன்னன்: அப்டேட் வெளியிட்ட படக்குழு!
புல்வாமா தாக்குதல்: மெளனம் கலைப்பாரா மோடி? – காங்கிரஸ் கேள்வி!