நொச்சிக்குப்பம் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று(ஏப்ரல் 19) கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்தார்.
சென்னை நொச்சிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் போராடி வருகின்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஏப்ரல் 19) சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது நொச்சிக்குப்பம் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, “நொச்சிக்குப்பம் மேற்கு பகுதியில் மீனவர்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் பாதுகாப்பு இடமாக அந்த பகுதியை அறிவிக்க வேண்டும்.
மேலும் மீன் வியாபாரம் செய்யும் இடமாகவும் படகு நிறுத்துமிடமாகவும் அந்த பகுதியை அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் முறையாகத் தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி, விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசும் போது, ”மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மக்கள் மீனவர்கள். அவர்களுக்கு இது தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை. எனவே போராடி வரும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, “இது மீனவர்களுடைய வாழ்வாதார பிரச்சனையாக இருப்பதால், அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.” என்று பேசினார்.
இந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “நொச்சிக்குப்பம் மீனவர்களின் நலன் காக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா