அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுள்ள அர்ப்பணிப்புடன் நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்பேன் என்று முன்னாள் பிரதமரும், ஜேடி(எஸ்) தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் மே 28 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இதனிடையே குடியரசுத்தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்றும் மோடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்றும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதோடு நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் அரசியலை கொண்டு வர விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமரும், ஜேடி(எஸ்) தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று(மே25)பேசிய அவர், ”புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தேசத்தின் திட்டம் . இது அவரது தனிப்பட்ட திட்டம் அல்ல. புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேசத்தின் சொத்து” என்று கூறினார்.
மேலும்,“பிரம்மாண்டமான நாடாளுமன்றக் கட்டிடம் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியில் கட்டப்பட்டதால் நாட்டுக்கே சொந்தம். இது பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அல்ல. முன்னாள் பிரதமர் என்ற வகையிலும், நாட்டின் குடிமகன் என்ற வகையிலும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,“பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் அரசியலை கொண்டு வர விரும்பவில்லை.
நான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக பணியாற்றி அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்ட பாடுபட்டுள்ளேன். எனவே அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்களில் என்னால் அரசியலை கொண்டு வர முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் நான் உறுதியாக இருப்பதால் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம்… மறைக்கப் பார்க்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்!