அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக இன்று (நவம்பர் 11) 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள அத்திபட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் இரவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் திருமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
மங்கல்ரேவு பகுதியில் ஆர்.பி உதயகுமார் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழி மறித்த அமமுக நிர்வாகிகள், டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.உதயகுமாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், விஷ்ணு, அபினேஷ் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்.பி. உதயகுமார் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக, காயமடைந்த தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், அதில் ஈடுபட்டதாக அமமுகவினர் 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சேடப்பட்டி காவல்நிலைய போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டெல்லி கணேஷ் இல்லனா… அந்த காமெடியே வந்திருக்காது : வடிவேலு உருக்கம்!