என்.எல்.சி. விவகாரத்தில் பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய வழக்கில் பாமக தலைவர் அன்புமணி ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ளார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்திய விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்திருந்த நிலையில்… கடந்த ஜூலை 25, 26 தேதிகளில் அவற்றை புல்டோசர் கொண்டு அழித்து, கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டது என்.எல்.சி.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆங்காங்கே போராட்டம் நடத்தியது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ஜூலை 27 ஆம் தேதி ஒரு போராட்ட அழைப்பை விடுத்தார்.
“கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன.
எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும்.
அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன்.
கடலூர் மாவட்ட உழவர்களையும், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அனைத்து அமைப்புகளும், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், தமிழ்நாடு உழவர் பேரமைப்பு உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்” என்று அழைப்பு விடுத்திருந்தார் அன்புமணி.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு முன்பே பாமகவினர் கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி மாவட்டம் முழுவதும் 22 பஸ்களை உடைத்தனர். மேலும் சொன்னது போலவே ஜூலை 28 ஆம் தேதி என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் அன்புமணி. அவர் தலைமையில் சுமார் 1500 பாமகவினர் குவிந்தனர்.
போராட்டம் முடிந்து மதியம் 1 மணியளவில் என்.எல்.சி.யின் கார்பரேட் அலுவலகத்திற்குள் போக முயன்றார் அன்புமணி. அப்போது போலீஸார் அன்புமணிக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஏற்பட்ட உணர்ச்சிகரமான சூழ்நிலையில் திரண்டிருந்த பாமகவினர் அன்புமணிக்கு ஆதரவாகவும் என்.எல்.சி.க்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு… போலீஸார் மீது கல் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள். இதில் போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
அன்புமணி உட்பட சில நிர்வாகிகளை கைது செய்வதற்காக போலீசார் வாகனத்தில் ஏற்றியபோது, அந்த போலீஸ் வாகனத்தையும் மறித்து தாக்கினார்கள் பாமகவினர். அப்போது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, லத்திசார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர். அதன் பின் அன்புமணி உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்குப் பிறகு நெல்லை சென்ற அன்புமணி, ‘இது ஒரு சாம்பிள்தான். என்.எல்.சி. போராட்டத்தில் பாமக எந்த எல்லைக்கும் செல்லும்’ என்றெல்லாம் பேசினார்.
இதற்கிடையே என்.எல்.சி. முற்றுகைப் போராட்டத்தை அனுமதியின்றி நடத்தியதாகவும் கலவரம் செய்ததாகவும் கலவரம் நடந்த போதே சிலரைப் பிடித்தனர் போலீஸார். அதன் பிறகு மேலிடத்து அனுமதி பெற்று, போலீஸ் வீடியோவில் பதிவாகியதைப் பார்த்துப் பார்த்து பாமக நிர்வாகிகளை கண்டுபிடித்து கைது செய்து வருகிறது கடலூர் மாவட்ட போலீஸ்.
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 272/2023 பிரிவு 147, 148, 294( b) 234, 324,353, 506 (2) 307 IPC மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது உட்பட பத்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று வரையில் 28 நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், ”போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வளையமாதேவி கிராமத்திலிருந்து ஐந்துபேர் கூட கலந்துக் கொள்ளவில்லை மாறாக சேலம், ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர், மாமல்லபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்” என்கிறார்கள் போலீஸார்.
இதற்கிடையில் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அன்புமணி மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று கடலூர் மாவட்ட போலீஸார், உயரதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீது போடப்பட்ட கொலை முயற்சி, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது போன்ற பிரிவுகளிலேயே அன்புமணி மீதும் வழக்குப் பதிவு செய்யலாம் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு கடலூர் மாவட்ட போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதன் பிறகுதான்… ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம், ‘அன்புமணி அழைப்பின் பேரில்தான் போராட்டத்துக்கு வந்தோம். அவரது தூண்டுதலின்பேரில்தான் என்.எல்.சி.க்கு எதிராக கலவரம் செய்தோம்’ என்று வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள் போலீஸார். கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து அன்புமணி ராமதாஸை முதல் குற்றம்சாட்டப்பட்டவராக (ஏ1) சேர்த்து… அவர் மீதும் கொலை முயற்சி, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்புமணி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-வணங்காமுடி
அழகர் கோவில் ஆடித்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கலைஞரின் நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
நில ஆர்ஜிதம் முடிந்து பல ஆண்டுகளாக அரசியல் சூழலுக்கு ஏற்ப சும்மா இருந்து விட்டு..இப்போது முறையற்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்க இயலாது..மின்சாரம் எப்போதும் எங்களுக்கு அவசியமில்லை என போராட்ட காரர்கள் அனைவரும் முழுமனதோடு சொல்வார்களா! NLC ஒரு மக்களுக்கான நிறுவனம்…நிலம் வழங்கியவர்களுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல் படி அத்தனை இழப்பீடுகளும் வழங்கியே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துகளும் இல்லை..சாலை விரிவாக்க வசதிக்காக என் நிலமே பறி போய் இருக்கிறது..
நாடு என வரும்போது எதையும் இழக்க வேண்டும் என்கிற விதி பொதுவானது..
சிலர் ஆண்டு கணக்கில் NLC யை மிரட்டி எத்தனை எத்தனை வகையில் ஏதோ ஒன்றை அனுபவித்து வருகிறார்கள் என்பதை அந்த நிறுவனம் அறியும்..
அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..அமைதி நிலவ வேண்டும்..