Attack on Rahul’s car
மேற்குவங்கத்தில் ராகுல்காந்தி கார் இன்று (ஜனவரி 21) உடைந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் நட்சத்திர தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட பாத யாத்திரை மணிப்பூரில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் ரோட் ஷோவுடன் தொடங்கினார். பின்னர் மால்டா மாவட்டத்தில் உள்ள தேபிபூர், ரதுவா வழியாக மேற்கு வங்காளத்திற்குள் மீண்டும் நுழைந்தது.
அப்போது ராகுல் பயணித்த காரின் பின் கண்ணாடி உடைந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறுகையில்,
“பீகாரின் கதிகாரில் இருந்து ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்குள் நுழைந்த பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதில் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது, இருப்பினும் ராகுலுக்கு எந்த காயமும் இல்லை” என்று கூறினார்.
“ஒருவேளை காருக்குப் பின்னால் இருந்து யாரோ கல் வீசியிருக்கலாம். காவல்துறை அதைக் கண்டும் காணாதது போல் இருக்கிறது. ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இது ஒரு சிறிய சம்பவம்தான். ஆனால் பெரிதாக நடப்பதைத் தடுக்க வேண்டும்” என்றும் ஆதிர் ரஞ்சன் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “எங்கள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது, ஆனால் எங்கள் யாத்திரை தடுக்கப்படாது, இந்திய கூட்டணி பணிந்து போகாது.
இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று மேற்கு வங்காள முதல்வர் கூறியதை நினைவூட்டுகிறேன்” என்று கூறினார்.
கார் கண்ணாடி உடைந்தது ஏன்?
இந்தநிலையில் ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுலை சந்திக்க இன்று ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் ஜியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றின் அழுத்தத்தால் காரின் கண்ணாடி உடைந்தது.
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீதி கேட்டு போராடி வருகிறார். பொதுமக்கள் அவர்களுடன் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சர்தார் 2 படத்தில் ரத்ன குமார்?
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? – நிதிஷ்குமார் விளக்கம்!
Attack on Rahul’s car