பாஜக செருப்பு வீச்சு: திமுக ட்விட் வீச்சு!

அரசியல்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜகவினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் ட்விட் வீச்சு செய்து வருகின்றனர்.

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் இன்று (ஆகஸ்டு 13) காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்துவதற்காக விமான நிலையம் வந்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் ஆகியோர் பாஜகவினருடன் விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பும் போது, பாஜகவினரில் பெண் ஒருவர் அமைச்சரின் காரை நோக்கி செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இங்கு வர பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என பிடிஆர் கேட்டதாக பாஜகவை சேர்ந்த சரவணன் கூறியிருக்கிறார். தலைக்கணம் பிடித்த அமைச்சர் பிடிஆர் என்றும், அவர் எங்கு சென்றாலும் பாஜக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாஜகவினருக்கு திமுகவினர் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

“இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் திமுக தொண்டர்கள் இதனை கையில் எடுக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார் திமுக ஐ.டி விங் மாநில செயலாளர் டிஆர்பி ராஜா.

எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “நிதியமைச்சர் பிடிஆர் சென்ற வாகனத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு காலணி வீசி அநாகரிகமாகவும் அராஜகமாகவும் நடந்து கொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், ‘மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் மீது மற்றும் Convoy மீதும் வன்முறை ஏவிவிட்ட பாஜக வின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. வன்முறை மற்றும் அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது சட்ட விதிகுட்பட்டு கடுமையான தண்டனை தேவை’ என கூறியிருக்கிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “அமைச்சரின் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறைகளை தூண்டும் இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்’ என கூறியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்ட பாஜக குண்டர்களின் அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுமேயானால் திமுக தடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கையில் ஈடுபடும்” என எச்சரித்துள்ளார்.

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘எங்கள் கால்களிலும் செருப்பு உள்ளது என்பது அண்ணாமலை உணர்வார்! நாங்கள் போராடித்தான் அந்த செருப்பினை கூட எங்கள் கால்களில் போட உரிமை பெற்றோம். அப்படி பெற்ற உரிமையான செருப்பை உங்கள் மீது வீசி எங்கள் செருப்புகளை கொச்சைபடுத்த விரும்பவில்லை’ என கூறியுள்ளார்.

திமுக ஐடி விங் இணை செயலாளர் ஆர்.மகேந்திரன் தனது ட்விட்டர் பதிவில், ’காலணி வீசி அட்டூழியம் செய்த பாஜகவின் மலிவு அரசியல் அருவருக்கத்தக்கது. அமைச்சர் மீது தாக்குதல் நடத்தி அநாகரிகமாகச் செயல்பட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்திருக்கிறார்.

இதுமட்டுமில்லாமல் திமுகவை சேர்ந்த பலரும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.

ஜெயப்பிரியா

வங்கிக் கொள்ளையர்கள்: போலீஸ் வெளியிட்ட போட்டோ- டிஜிபி பரிசு அறிவிப்பு!

+1
2
+1
1
+1
1
+1
2
+1
0
+1
1
+1
0

3 thoughts on “பாஜக செருப்பு வீச்சு: திமுக ட்விட் வீச்சு!

  1. எப்படியாச்சும் கலாட்டா பண்ணி கலவரம் உண்டாக்கப் பாத்தாலும், எல்லாரும் வெறும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிறாங்க…(சங்கிகள் மைண்ட் வாய்ஸ்)

  2. குண்டர்கள் மரியாதை செலுத்த போனார்களா இல்ல செருப்பு வீச போனார்களா, பிணத்திலும் அரசியல் செய்யும் தரம்கெட்டவர்கள் பிஜேபி

    1. திமுக விடம் கற்ற பாடமாக இருக்கும்..

Leave a Reply

Your email address will not be published.