டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் ஒரே பெண் அமைச்சரான அதிஷி மர்லேனா இன்று (செப்டம்பர் 17) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரத்துசெய்யப்பட்ட டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் எழுந்த பண மோசடி புகாரில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன்படி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ‘இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கடந்த 15ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி இன்று மாலை டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
அதற்கு முன்னதாக அடுத்த டெல்லி முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திலீப் பாண்டே, முதலமைச்சர் யார் என்பதை கெஜ்ரிவால் முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்று டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷியின் பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கைதட்டி கெஜ்ரிவாலின் முடிவை வரவேற்று வழிமொழிந்தனர்.
டெல்லி அரசில் நிதி, கல்வி, பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட 11 முக்கிய இலாகாக்களை அதிஷி வைத்துள்ளார். இவர் தான் ஆம் ஆத்மி கட்சியில் உள்ள ஒரே பெண் அமைச்சர்.
ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் துணை முதல்வர் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு கல்வி அமைச்சரானார். தொடர்ந்து கெஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் கட்சியின் பொறுப்பையும் ஏற்று வழிநடத்தினார்.
இவர் மீது கட்சியின் தலைமை முழு நம்பிக்கை வைத்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிஷி டெல்லியின் புதிய முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சுஷ்மா ஸ்வராஜ்(பாஜக), ஷீலா தீட்சித்(காங்கிரஸ்) ஆகியோரை தொடர்ந்து டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் அதிஷி.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜனாதிபதி முர்மு முதல் விஜய் வரை : வாழ்த்து மழையில் பிரதமர் மோடி
எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறிய வித்யாபாலன்… காஞ்சிபுரம் சேலையில் அழகான போஸ்!