நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்!

Published On:

| By Kavi

போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது இன்று (மார்ச் 6) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் குறித்துப் பேசியது சர்ச்சையானது. அப்போதே ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

அருந்ததியர் மக்களின் வரலாற்றை அடிப்படை ஆதாரம் இல்லாமல் சீமான் பேசியதாக கூறி அவரது பரப்புரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் போரூரில் உள்ள நாம் தமிழர் அலுவலகத்தை முற்றுகையிட 200க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனையும் மீறி அவர்கள் நாம் தமிழர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றதால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது கல் வீச்சு, பாட்டில் வீச்சு தாக்குதலும் நடத்தியிருக்கின்றனர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக மாறியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரியா

விமர்சனம்: அயோத்தி!

லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share