டெல்லியில் நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் அக்கட்சியின் அரசியல் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் பாண்டி சஞ்சய்யைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் முக்கியமான ஐந்து தலைவர்கள் மாநிலம் முழுவதும் நடைபயணம் செய்ய அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் மோடி பேசினார். இதன் மூலம் கர்நாடகாவில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க எடியூரப்பாவின் தேவை வேண்டும் என்பதை பிரதமர் மோடி அறிந்து செயல்படுவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் திராவிட அரசியலுக்கு எதிரான பாஜகவின் கலாச்சார தேசியவாத அரசியலின் முக்கியமான நிகழ்வாக, வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இதன் மூலம் தென் இந்தியாவில் கட்சியை வலுப்படுத்துவதற்காக மோடி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மாநிலத் தலைவர் நளின் கட்டீல் ஆகியோர் பாஜகவின் வளர்ச்சி குறித்து பேசினர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வருகைகள் கர்நாடகாவில் பாஜகவின் நிலைமையை மேம்படுத்தியுள்ளது என்று அவர்கள் பேசினர்.
அவர்கள் பேசிய பிறகு எடியூரப்பாவுடன் பிரதமர் மோடி பேசினார். அவர், தனது மகன் விஜயேந்திரர் மற்றும் கர்நாடகாவில் பாஜகவின் எதிர்காலம் குறித்து பேசினார்.
“வட மாநிலங்களை போல கர்நாடகாவில் நாம் காங்கிரசுக்கு எதிராக வெற்றி பெற்று விட்டோம். ஆனால் பிற மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளை நாம் எப்படி வெற்றி கொள்ள போகிறோம்.
வருகின்ற தேர்தலில் கர்நாடகாவில் நாம் வெற்றி பெறாமல், பிற மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது கடினமான காரியம்” என்று மோடி பேசியுள்ளார்.

கர்நாடகா தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தென் மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியை அமைப்பதில் கர்நாடகா நுழைவாயிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகளை எதிர்கொள்வதிலும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி 80 நிமிடங்கள் கட்சி நிர்வாகிகளை புகழ்ந்து பேசியுள்ளார். பின்னர் தான் கட்சியின் எதிர்கால பணிகள் குறித்து பேசியுள்ளார்.
தென் இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து மோடி பேசியது அரசியல் அரங்கில் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.
செல்வம்