வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இன்று(ஜூன் 28) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006 ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, இன்று(ஜூன் 28 ) தனது மனைவியுடன் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்
இந்நிலையில், இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்