அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை (ஜனவரி 7) தீர்ப்பு வெளியாகிறது.
கடந்த 2006-11ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி அமைந்ததும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, தா.மோ.அன்பரசன். எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரது வரிசையில் 9ஆவது முன்னாள் அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.94.88 லட்சம் சொத்து குவித்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
2012ஆம் ஆண்டு பதியப்பட்டு வந்த இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 27, 2022 அன்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் அமைச்சர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்குத் தொடரப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள்
அமைச்சர் ராமச்சந்திரன் போன்று 2006-11 வரையிலான திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருடைய மனைவி மணிமேகலை உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வாதி பிரதிவாதங்கள் முடிவடைந்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லாததால் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை இருவரையும் விடுவிப்பதாக நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார்.
தங்கம் தென்னரசுக்குத் தீர்ப்பு வந்த அடுத்த நாளே அமைச்சர் கீதா ஜீவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது.
1996-2001 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம், அமைச்சர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்நிலையில் நாளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது.
பிரியா
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா போட்ட புதிய உத்தரவு!
மத்திய சுகாதார அமைச்சரிடம் மா.சு வைத்த கோரிக்கைகள்!