டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்வு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நாள் திமுகவுக்கும் தமிழக அரசியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படும் நிலையில், அதே நாளில் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் நடைபெற உள்ளது.
ஸ்டாலின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் கீதாஜீவன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் டிசம்பர் 14ஆம் தேதி தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி 1996-2001 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அந்த கால கட்டத்தில் அவரது மகளும் தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவன் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தார்.
திமுக ஆட்சிக்குப் பிறகான அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை என்.பெரியசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிந்தது.
இந்த வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக என்.பெரியசாமி, அடுத்ததாக அவரது மனைவி எபிநேசர், மூன்றாவது, நான்காவதாக அவரது மகன்கள் ராஜா, ஜெகன் (தற்போது தூத்துக்குடி மாநகர மேயர்),
ஐந்தாவதாக கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப் , ஆறாவதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் என்.பெரியசாமி கடந்த 2017 மே 26 ஆம் தேதி காலமானார்.
ஆனபோதும் அவரைத் தவிர அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.
இந்த பின்னணியில் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி இந்த வழக்கில் டிசம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறார். தீர்ப்பு வழங்க இருப்பதால் அப்போது நீதிமன்றத்தில் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் நேரடியாக ஆஜராவார்களா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உதயநிதி அமைச்சர் பதவியேற்க இருக்கும் அதே நாளில் திமுக அமைச்சர் ஒருவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான முக்கியமான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட இருப்பதால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-வேந்தன்
மீண்டும் நிர்வாகிகளை சந்தித்த விஜய்
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த உச்ச நீதிமன்றம்!