சட்டமன்றத்தில் வீசக் காத்திருக்கும் புயல்கள்!

அரசியல்

தமிழக சட்டமன்றம் அக்டோபர் 17-ம் தேதி கூட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சியான அதிமுகவை அதிரவைக்க திமுக-வும். திமுக-வுக்கு செக் வைக்கும் விதமாக விவாதங்களை கிளப்ப அதிமுக-வும் திட்டமிட்டுள்ளன.

பன்னீர் தனி அணியா?

ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக யாருக்குச் சொந்தம் என ஓபிஎஸ்-ம் இபிஎஸ்-ம் சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பேரவை கூடுவது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 2-ம் தேதி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் படி அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்கிற நிலை நீடிக்கிறது.

ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கியது தொடர்பாகவும் இபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் சட்டமன்றம் கூடினால் ஓபிஎஸ் தரப்புக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமித்துவிட்டார் எடப்பாடி. ஆனால் இது செல்லாது என்று பன்னீர் சொல்லி வருகிறார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இன்னும் க்ளைம் செய்துகொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

எனவே அவர்களுக்கு அதிமுக கொறடா உத்தரவிட வாய்ப்பில்லை. அவர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையிலேயே தனியாக இடம் ஒதுக்க வாய்ப்புள்ளது. அதிமுகவில் தனி பிரிவாக செயல்பட சபாநாயகர் அனுமதிப்பாரா என்பதும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

நேற்று (அக்டோபர் 7) செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் அனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனால் முதல் நாள் கூட்டத்தில் இருக்கையில் அமர்வதற்கு முன்பே சட்டப் பேரவை ஒரு புயலை சமாளிக்க தயாராகி வருகிறது.

ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக அரசு செய்தி வெளியிட்டது.

அந்த உள்ளிட்டோர் என்ற வார்த்தையின் மூலம் அரசு யாரை மறைக்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து டிஜிட்டல் திண்ணை:  ஆறுமுகசாமியின் விசாரணைப் பட்டியல்: அரசு மறைப்பது யாரை? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

assembly session hottest issues dmk admk ops eps

இதன் படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான விபர அறிக்கையுடன் சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல மர்மங்களுக்கு விடைகிடைக்கும். அதே நேரத்தில் ஆணையம் விசாரிக்க பரிந்துரைத்திருக்கும் மேலும் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களும் வெளியில் வரும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆணையம்

இதே போல எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையும் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த அறிக்கையும் ஆகஸ்டு மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் விசாரணை ஆணையம் 17 காவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த தகவலை மட்டுமே அரசு வெளியிட்டுள்ளது.

ஆனால், அப்போது காவல் துறையை கைவசம் வைத்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையிலான ஆணையமும் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதியே முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. இந்த விசாரணை அறிக்கையும் சட்டப்பேரவையில் விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் திட்டம் என்ன?

திமுக அரசின் இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து சட்டப்பேரவைக்கூட்டத்தில் விவாதத்தைக் கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்தும் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வரும் திமுக அமைச்சர்களின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதிமுக கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் கசிந்தது தொடர்பாகவும் அதிமுக புயலைக் கிளப்ப வாய்ப்புகள் உள்ளன.

இதனால் இந்த சட்டப் பேரவைக் கூட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அப்துல் ராஃபிக்

மீண்டும் சேதமான மோடி ரயில்

திமுகவில் திடீர் அதிசயம்: பாயும் பணம்- இதோ பட்டியல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.