அதிமுக இடைக் காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கினார். தொடர்ந்து நீக்கியும் வருகிறார். பதிலுக்கு பன்னீர் செல்வமும் எடப்பாடி உள்ளிட்டோரையும் பல்வேறு மாவட்டச் செயலாளர்களையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த நீக்கப் போட்டியின் அடுத்த கட்டமாக… சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் பன்னீர்செல்வத்தை அகற்றுவதற்கு எடப்பாடி சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். எடப்பாடி இப்படி காய் நகர்த்தக் கூடும் என்பதை ஏற்கனவே அறிந்துதான் எடப்பாடி தரப்பில் இருந்து கடிதங்கள் வந்தால் அது செல்லத் தக்கதல்ல என்று சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி அனுப்பிவிட்டார் பன்னீர் செல்வம்.
இந்த நிலையில்தான் வரும் ஜுலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டு போடுவது தொடர்பான பயிற்சிக்காக, ஜூலை 17 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முதலில் இந்தக் கூட்டம் பசுமை வழிச் சாலையில் உள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பங்களாவில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு அரசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களை கூட்டி அரசியல் செய்கிறார் என்று புகார்களைக் கிளப்பியதால்… எடப்பாடி பழனிசாமியின் அரசு பங்களாவில் நடைபெறவிருந்த அதிமுக எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை, தற்போது க்ரோவன் பிளாசா ஹோட்டலுக்கு மாற்றிவிட்டார்கள்.
இடத்தை மாற்றியதில் இருந்தே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரசியல் இருப்பது தெளிவாகிவிட்டது. இந்தக் கூட்டம் பற்றி எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தில் பேசினோம்.
“இப்போது எடப்பாடி பக்கம் 63 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். பன்னீர் பக்கம் அவர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என மூவர்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பன்னீரின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பிடுங்குவது தொடர்பாகத்தான் விவாதிக்க இருக்கிறோம்.
எடப்பாடி தலைமையிலான 62 சட்டமன்ற உறுப்பினர்களிடமும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து பன்னீரை நீக்க கோரும் தீர்மானம் கையெழுத்து வாங்கப்பட உள்ளது.
இதுமட்டுமல்ல… பன்னீரின் இடத்துக்கு யாரை நியமிக்கலாம் என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு மேற்கொள்ளப்படும். பன்னீர் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்துக்கே ஒதுக்கிட தீர்மானித்துள்ளார் எடப்பாடி.
இந்த வகையில் பொதுக்குழுவில் பன்னீரின் இன்னொரு முகத்தை புட்டுப் புட்டு வைத்து எடப்பாடியிடம் பாராட்டு வாங்கிய நத்தம் விசுவநாதன் முதல் இடத்தில் இருக்கிறார். பொதுக்குழுவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தலைமகன் என்று பட்டம் கொடுத்த நாகை மாவட்டச் செயலாளரும் அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் எதிர்கட்சித் துணைத் தலைவர் ரேஸில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் திண்டுக்கல் சீனிவாசன் இடம் பெற்றுள்ளார்.
இவர்களில் ஒருவர்தான் பன்னீரின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார். அதன் பின் சட்டமன்ற தலைவருக்கு முறையாக கடிதம் அனுப்பப்படும்” என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தில்.
–வணங்காமுடி