2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரும் ஆளுநர் அனுமதி பெற்ற பின் தொடங்கும். அந்த கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைத்தால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநரின் அனுமதி பெற வேண்டும்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை ஆளுநர் இன்று(டிசம்பர் 15) முடித்து வைத்துள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.
இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய சட்டசபைகூட்டம் நிறைவடையும்.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.
இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புதிய அமைச்சராக பொறுப்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் பெயர் அமைச்சர்கள் வரிசையில் 10 வது இடத்தில் இருப்பதால் சட்டப்பேரவையில் முதல் வரிசையிலே இடம் ஒதுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலை.ரா
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை அப்டேட்!
ஐஸ்வர்யா ராயுடன் காதல்: விவேக் ஓபராயின் விநோத பதில்!