2024ல் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில், ’நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும்’ என்று கூறிவருகிறார்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 2) தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அரசியலில் வாய்ப்புகள் இல்லை என்று சொல்ல முடியாது.
தற்போது என்.ஐ.ஏ ரெய்டுகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பும் என்.ஐ.ஏ ரெய்டுகள் நடந்திருக்கின்றன. அப்போது ஆயுதங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்திய இறையாண்மைக்கு எதிரான சில செயல்பாடுகள் எல்லாம் போய்க்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகிறது.
இந்த தகவல்கள் உறுதியானால் 1991ல் தேர்தல் வந்தது போல், மீண்டும் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எனது யூகம்” என்றார்.
மேலும் அவர், “ஓசி என்று சொன்னது திமுகவின் குணாதிசயத்தை காட்டுகிறது. அவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்காமல் இருந்தனர்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல் காரணமாக திமுகவே பரவாயில்லை என திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தனர்” என விமர்சித்தார்.
அதிமுக மூன்று அணிகளாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது. எப்போது ஒன்று சேரப் போகிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “நாங்கள் (அமமுக) ஐந்து வருடமாகத் தனியாகத்தான் இருக்கிறோம். தனி இயக்கமாகச் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவில் தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சினை முடிவுக்கு வரும்.
இன்னொரு கட்சியில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் கூட்டணி வைப்போம்” என்றார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஆணவம் யாருக்கு இருந்தாலும் அதனை தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள்” என்றார்.
முன்னதாக காந்தியின் பிறந்தநாள், காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு, தஞ்சையில் ஒரு தனியார் விடுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இரு தலைவர்களின் படத்துக்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரியா
அந்த அஞ்சு பேர் மட்டும் என்னோட வரத் தயங்கறாங்க: சசிகலா ஓப்பன் டாக்!
வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்!