மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று (நவம்பர் 11) நிறைவேறி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது மாநிலத்தில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஸ்.சிக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாகவும், எஸ்.டிக்கான இடஒதுக்கீடு 26 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா ஜார்க்கண்ட் சட்டசபையில் நிறைவேறி உள்ளது.
அதன்படி, எஸ்.சிக்கான இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எஸ்.டிக்கான இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12 சதவீதமாகவும், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதமாகவும் உயர்த்தி, மொத்தம் 77 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இதை, அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்குமாறு மத்திய அரசிடம் வற்புறுத்தப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்திய ஒற்றுமை பயணம்: அரசியலை விட ஆழமானது-ஆதித்ய தாக்கரே
6 பேர் விடுதலை: பழ.நெடுமாறன் முதல்வரிடம் வேண்டுகோள்!