முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணத்தின்போது கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் கடிதம் விடுத்தது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி கன்னியாகுமரி – காஷ்மீர் வரை 150நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலமாக நடைப்பயணத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றியும் வருகிறார்.
தற்போது மகாராஷ்டிராவில் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அடுத்ததாக மத்திய பிரதேச மாநிலத்தில் நடைப்பயணத்தை தொடரவுள்ளார்.
மிரட்டல் கடிதம்
இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தி ”சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவி செய்தவர் என்றும் அச்சத்தின் காரணமாக மன்னிப்பு கடிதம் எழுதியவர்” என்றும் மகாராஷ்டிராவில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த போது பேசியிருந்தார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசிய அடுத்த நாளே, நடைப்பயணத்தின் போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு இனிப்பு கடையின் முன்பு கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், “நவம்பர் 28ஆம் தேதியன்று மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள கல்சா மைதானத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது குண்டு வெடிப்பு நிகழும்” என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும், ”ராகுல் காந்தி மற்றும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தினால் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்நிலையில், மிரட்டல் கடிதம் தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
மேலும் 3நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களைக் கைது செய்ய போலீஸ் குழு ஹரியானா சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கம் எவ்வளவு? ஸ்டாலின் முக்கிய முடிவு!
பன்னீர்-தினகரன் சந்திப்பு நடக்கப்போகும் இடம் இதுதான்!