அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தொடுத்த அவதூறு வழக்கில் கம்ரூப் மாவட்ட முதன்மை நீதிமன்றம், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நேரில் ஆஜராகச் சொல்லி இன்று (ஆகஸ்ட் 23) சம்மன் அனுப்பியுள்ளது.
மதுவிலக்கு விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்ததையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு அடுத்து ஒரு சோதனை வந்துள்ளது.
மணீஷ் சிசோடியா, 2022, ஜூன் மாதம் 4ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, ”கொரோனா தொற்றுநோய் பரவலின்போது,
சந்தை விலைக்கு அதிகமாக பிபிஇ கருவிகளை வாங்க, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அவரது மனைவி மற்றும் மகனின் வணிக பங்குதாரருக்கு ஒப்பந்தங்கள் வழங்கினார்” என குற்றஞ்சாட்டியிருந்தார்.
”600 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிபிஇ கிட்டை 990 ரூபாய் கொடுத்து அவர் வாங்கியிருக்கிறார்.
இது மிகப் பெரிய குற்றம். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது” என அசாம் முதல்வர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக மணீஷ் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், மணீஷ் சிசோடியாவுக்கு அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செப்டம்பர் 29 ஆம் தேதி ஆஜராகவேண்டுமென்று இன்று (ஆகஸ்ட் 23) சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
பிஜேபியில் சேர பேரம்: அதிரவைத்த டெல்லி துணை முதல்வர்!