“உதயநிதியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்” : மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி கடிதம்!

Published On:

| By Kavi

Delhi bjp letter to M.K.Stalin

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டெல்லி பாஜக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

உதயநிதியின் இந்த பேச்சு கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் பேசு பொருளாகியிருக்கிறது. உதயநிதி மீது காவல் துறையில் பாஜகவினர் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி பாஜக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில்,

“நமஸ்காரம் ஜி, உங்கள் மகனும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்து, மன வேதனையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

செப்டம்பர் 2, 2023 அன்று வெளியான செய்திகளின்படி, சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உங்கள் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 100 கோடிக்கும் அதிகமான மக்களின் உணர்வுகளை திரும்ப திரும்ப காயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

உதயநிதி உங்கள் மகன் மட்டுமல்ல. இந்தியர்களின் மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்த அனுமதிக்காத இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அமைச்சராக இருக்கிறார்.

சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயரிடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயரிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்களுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதோடு அவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

இது இந்தியர்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் நடவடிக்கையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சாக உள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரசியல் சாசனப் பதவியில் இருப்பவரிடமிருந்து வரும் இதுபோன்ற சட்டவிரோதமான, தண்டனைக்குரிய, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான கருத்துகள், நடவடிக்கைகள் மிகவும் கவலைக்குரியது.

இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவரின் பின்னால் நீங்களும் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/BJP4Delhi/status/1698579228957270134

இந்த விவகாரத்தில் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்று டெல்லி பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் நான் பேசியதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

‘எம்மதமும் சமமே’: உதயநிதி சனாதன பேச்சு… காங்கிரஸ் அதிகாரபூர்வ கருத்து!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் அதிரடி பதவி நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel