அமெரிக்கா வரை எதிரொலித்த அசோக் நகர் பள்ளி விவகாரம்… ஸ்டாலின் பதில்!

அரசியல்

அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

பரம்பொரும் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மகா விஷ்ணு, சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதனை ஆசிரியர் ஒருவர் தட்டி கேட்கும் போது, ஆசிரியரிடமே அந்த சொற்பொழிவாளர் திமிராக நடந்துகொள்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இவ்விவகாரம் அமெரிக்கா வரை சென்றிருக்கிறது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோவில் இருந்து இந்த வீடியோவை பார்த்துவிட்டு அங்கிருந்தவாறு மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இன்று (செப்டம்பர் 6) அவர் தனது எக்ஸ் பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.

அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாவ, புண்ணிய வகுப்பு… ஆசிரியரிடம் ஆணவப் பேச்சு : அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது?

வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி அறிவிப்பு!

பியூட்டி டிப்ஸ்: அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்ற ஆடைகள் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *