காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்புடன் பேசப்பட்டு வந்த தேசிய தலைவர் தேர்தல் முடிவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நேற்று (அக்டோபர் 19) நடைபெற்ற நிலையில் 7,897 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் இந்தியாவின் பழம்பெருமைமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருப்பது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெலாட்டுடன் மோதும் சச்சின்!
அதேவேளையில் காங்கிரஸில் மூத்த அரசியல்வாதியான அவர் முன்பு உடனடியாக தீர்த்துவைக்க வேண்டிய பல பிரச்சனைகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியாமானது ராஜாஸ்தானில் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையேயான தலைமை மோதல் தான்.
2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் உரசல் தொடங்கிவிட்டது.

ராஜஸ்தானில் 2013 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த சச்சினைத்தான் முன்னிறுத்தினார் ராகுல் காந்தி.
அதன்படி 2018 தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சின் பைலட் கடுமையாக உழைத்தார். இதனால் அவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட்டை முதல்வராக்கி அதிர்ச்சி கொடுத்தது.
இதனைதொடர்ந்து அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையேயான மோதல் போக்கு சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
கார்கேவுக்கு சவால் விடுக்கும் ராஜஸ்தான் அரசியல்!
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக அடுத்த ஆண்டு (2023) நவம்பரில் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. ராஜஸ்தான் அரசியல் வரலாற்றில் பொதுவாக ஆட்சியில் இருக்கும் கட்சி அடுத்து வரும் தேர்தலில் தோல்வி அடைவது தொடர் கதையாகும்.
இந்நிலையில் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் சச்சின் பைலட் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள கார்கேவுக்கு இது முக்கிய பணியாக முன்னிறுத்தப்படுகிறது.
கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக தொடர வேண்டுமா? அல்லது இளம் தலைவரான சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கெலாட்டுக்கு ஆதரவளிக்கும் கார்கே?
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து பேசிய கார்கே, ”அனுபவத்திற்கு மாற்று இல்லை என்றும், இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தங்கள் முறைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியது, அசோக் கெலாட்டுக்கு அவரது ஆதரவை தெரிவிக்கும் அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அசோக் கெலாட், தற்போது வெற்றி பெற்றதும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு பலருக்கும் முன்னதாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியில் சோனியா காந்தி?
இதற்கிடையே சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கில் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் தான் கட்சியின் பிரதிநிதிகள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே அசோக் கெலாட்டும் முலாயம் இறுதிச் சடங்கிற்காக ஷைபாய்க்கு சென்ற நிலையில் அவரது பெயரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் கெலாட் மீது சோனியா அதிருப்தியில் இருக்கிறார் என்று கட்சி மட்டத்தில் பேச்சு எழுந்தது. மேலும் கெலாட் ராஜஸ்தானில் முதல்வராக தொடர அவர் விரும்பவில்லை என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் தலைமை விவகாரத்தில் கார்கே என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சையாக தனது விருப்பப்படி அசோக் கெலாட்டுக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது சோனியா காந்தியின் விருப்பத்திற்கு ஏற்ப சச்சின் பைலட்டுக்கு ஆதரவு கரம் நீட்டுவாரா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.