காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் அசோக் கெலாட்

அரசியல்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வலுவான தலைமை தேவை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு  தேர்தல் அட்டவணையும் நேற்று (செப்டம்பர் 22) வெளியிடப்பட்டது.

தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை செப்டம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 17ம் தேதி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

அதன்பிறகு  அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

அன்றைய தினமே காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் குழு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், கேரள எம்பி சசி தரூரும் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 23) செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.

“நான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை நிர்ணயம் செய்வேன்.

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்த்து எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவே சோனியா காந்தி, ராகுல்காந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.

காங்கிரஸ் தலைவராவதற்கான அனைவரின் முன்மொழிவையும் ஏற்குமாறு நான் ராகுல் காந்தியிடம் பலமுறை கேட்டுக் கொண்டேன்.

காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அடுத்த தலைவராக வரக்கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்,” என்று  அசோக் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் கேரள எம்பி சசி தரூருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும்,  

கெலாட்டின் அனுபவம், அவருக்கு காங்கிரஸ் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு ஆகியவற்றால் அவரே காங்கிரஸ் தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இரண்டிலும் இருக்க அசோக் கெலாட் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, ‘‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறையை தான் ஆதரிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் கொண்டுவரப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலை.ரா

நடிகை பவுலின் வழக்கில் திருப்பம்: முக்கிய ஆதாரம் சிக்கியது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *