வைஃபை ஆன் செய்ததும் அதிமுக மாசெக்கள் கூட்டம் பற்றிய அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது கூடவே, ‘செயற்குழு கூட்டம் என்றார், இப்போது மாசெக்கள் கூட்டம் என்கிறார்… அப்படி என்னதான் பேசுகிறார்கள்?’ என்ற கேள்விகளும் வந்து விழுந்தன.
ஒரு ஸ்மைலியை ரியாக்ஷனாக போட்டுவிட்டு மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான வார்த்தைப் போர் மீண்டும் பரபரப்பாய் அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. அதிமுகவினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன் என்ற ரீதியில் பாஜக தலைவர் அண்ணாமலை கூற, அதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான ரியாக்ஷன்கள் வந்தன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘அதிமுக என்பது நெருப்பு, நெருப்போடு விளையாடக் கூடாது’ என்றார். அதற்கு பதிலளித்த பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, ‘அதிமுக என்பது அணைந்துபோன நெருப்பு’ என்று கிண்டலடித்தார்.
இந்த நிலையில்தான் அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக பற்றி எதுவும் பேசப்படவில்லை, மாறாக பூத் கமிட்டி, இளம்பெண்கள் பாசறை போன்ற விஷயங்களே விவாதிக்கப்பட்டன. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பற்றி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் ஃபார்மலாக நடந்து முடிந்ததும் முக்கியமான நிர்வாகிகளோடு தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.

அப்போது அண்ணாமலையின் மிரட்டல் பற்றி சிலர் கேட்க, ‘அவர் பத்தியெல்லாம் நாம எதுக்கு பேசிக்கிட்டிருக்கணும். அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை அதிமுக-பாஜக கூட்டணி இருக்குறதுக்கு வாய்ப்பில்லைனு தோணுது. நாமாக பாஜகவை வெளியேத்தாம, அவங்களா போனாலும் நமக்கு நல்லதுதான்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதேபோல, ‘கர்நாடக தேர்தலில் போட்டியிட ஈரோடு கிழக்கு போல உச்சநீதிமன்றத்தை அணுகி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்து சின்னத்தை வாங்கியிருக்கலாமே?’ என்று சிலர் கேட்டனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி, ‘ஈரோடு கிழக்கு தேர்தல் நமக்கு முக்கியமான விஷயம். அதனால போர்க்கால அடிப்படையில உச்ச நீதிமன்றத்துக்கு போனோம். அது தற்காலிகமான வழிமுறை. அதே வழிமுறையை இப்பவும் பின்பற்ற முடியாது. தேர்தல் ஆணையத்தின் மூலமா நமக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கணும். அதனாலதான் டெல்லி ஹைகோர்ட்டுக்கு போனோம்.
தேர்தல் ஆணையம் நமக்கு சாதகமாதான் முடிவெடுக்கும். இதுவரைக்கும் மத்த கட்சிகள் விஷயத்துல தேர்தல் ஆணையம் எடுத்த முடிவையெல்லாம் பார்த்தா அதுதான் தோணுது. ஒருவேளை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கறதுக்குள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிஞ்சிட்டா கூட கவலைப்பட வேணாம். நமக்கு கர்நாடக தேர்தல் முக்கியமில்லை. இரட்டை இலையை நிலை நிறுத்திக்கறதுதான் முக்கியம்’ என்று விளக்கியிருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில்தான் தன்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை செயற்குழுவில் வைத்து ஒப்புதல் வாங்கிய நிலையில் பொதுக் குழுவிலும் ஒப்புதல் பெறுவதற்காக விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார் எடப்பாடி. அதுபற்றித்தான் மாசெக்கள் கூட்டத்தில் 20 ஆம் தேதி விவாதிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே மதுரை மாநாடு ஆகஸ்டு என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாகவோ பிறகோ பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது பற்றி மாசெக்கள் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க இருக்கிறார்கள். இதன் மூலம் பொதுச் செயலாளர் தேர்தலின் நடைமுறையை முழுமைப்படுத்திட தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மற்றபடி பாஜக கூட்டணி, கர்நாடக சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் பற்றியெல்லாம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எடப்பாடி. 2026 சட்டமன்றத் தேர்தலில் முழு பலத்தோடு திமுகவை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடியின் தற்போதைய ஒரே திட்டம். மற்றதெல்லாம் வெளியேதான் விவாதிக்கப்படுகிறதே தவிர எடப்பாடி அதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தலைமைக் கழக வட்டாரத்தினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது: அதிமுகவுக்கு முதல்வர் பதில்!
விருத்தாசலம் சிறுமி விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!