சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசி வருகிறார்.
டெல்லியில் பணியாற்றும் அனைத்து குரூப் ஏ அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்களை பரிந்துரைக்கும் அதிகாரம் கொண்ட தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அதிகாரிகளை மாநில அரசால் மாற்ற முடியாது. அந்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் கைக்கு போகும்.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களவையில் பாஜகவுக்கு அதிக எம்.பி.க்கள் இருப்பதால் அங்கு இச்சட்டம் எளிதாக நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் கெஜ்ரிவால்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜூன் 1) சந்தித்து ஆதரவு கோருவதற்காக பிற்பகல் 4 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் இருவரையும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஆம் ஆத்மி தமிழக தொண்டர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு வந்தடைந்தனர்.
அப்போது கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றார். ஸ்டாலினுக்கு கெஜ்ரிவாலும், பகவந்த் சிங் மானும் பூங்கொத்து வழங்கினர்.
தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள், தமிழக முதல்வருடன் பேசி வருகின்றனர். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து கெஜ்ரிவால் நாளை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சிவசேனா உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
மோனிஷா