தேர்தல் நாளான பிப்ரவரி 5-ஆம் தேதி பாஜகவுக்கு வாக்களித்தால் நீங்கள் வீட்டிற்குச் செல்லும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி 70 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் களமிறங்குகின்றன. பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நேற்று (ஜனவரி 22) ஆலோசனை மேற்கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கிழக்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள திரிலோக்புரி, பட்பர்கஞ்ச், லக்ஷ்மி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கெஜ்ரிவால் பேசும்போது,
“நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும். அவர்கள் வளர்ந்த பின்பு, தவறான கட்சிக்கு வாக்களித்ததற்காக உங்களைக் குறை கூறுவார்கள்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குகிறது. அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் அத்தகைய வசதிகளை வழங்கத் தவறிவிட்டது.
தேர்தல் நாளான பிப்ரவரி 5-ஆம் தேதி பாஜகவுக்கு வாக்களித்தால், நீங்கள் வீட்டிற்குச் செல்லும் போது மின்சாரம் துண்டிக்கப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவசக் கல்வி நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். அது நடக்க வேண்டுமா? உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்ற துடைப்பம் பொத்தானை அழுத்தவும்.
டெல்லியில் உள்ள இலவச சுகாதார சேவைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணங்களை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாந்திர மானியம் ரூ.2,100 உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.