அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (மார்ச் 22) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று (மார்ச் 21) கைது செய்தனர்.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ ஆஜராகி, “டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. இந்த புதிய மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதிலும், சவுத் குரூப்புக்கு ஆதரவாகவும் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார். அதனால் 10 நாட்கள் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி, “ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட நான்கு முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நேரடியான ஆதாரம் இல்லை. அதனால் இவர்களை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மார்ச் 28-ஆம் தேதி வரை கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி காவேரி பவேஜா அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்பவனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறேன்: ஸ்டாலின்
வெறுப்பு பேச்சு… மத்திய அமைச்சர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!