2025 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு (2025) டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், “இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளும், 1 – 2 தொகுதிகள் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம்” என்று ஏஎன்ஐ ஆங்கில ஊடகத்தில் இன்று செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை குறிப்பிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் இந்தியா கூட்டணி தோல்வியை சந்தித்து வந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைமைக்கு பொறுப்பேற்க தயார் என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இதனால் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) உள்ளிட்ட கட்சிகள் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தசூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Kanguva Teaser: ‘வெறித்தனம்’ காட்டும் சூர்யா… ‘சும்மா தெறிக்குது’ கொண்டாடும் ரசிகர்கள்!
ஹன்சிகா படத்தில் புது முயற்சி… சாதிப்பாரா?