டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய தொழிலதிபர், அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு 30 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அதில் அதே வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட இன்னொரு நபர், அவர் கைது செய்யப்பட்ட 5 நாட்களில் பாஜகவிற்கு 5 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்த தகவல் வெளிவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதே வழக்கில் அவர் அப்ரூவராக மாறியதற்குப் பிறகு மேலும் 25 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை பாஜகவிற்கு வழங்கியிருக்கிறார்.
சரத் சந்திரா ரெட்டி, அரபிந்தோ ஃபார்மா (Aurobindo Pharma) நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். அவர் நவம்பர் 10, 2022 அன்று டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அடுத்த 5 நாட்களில் நவம்பர் 15, 2022 அன்று 5 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அவரது அரபிந்தோ ஃபார்மா நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் நவம்பர் 21, 2022 அன்று பாஜகவால் பணமாக மாற்றப்பட்டிருக்கின்றன.
சரத் சந்திரா ரெட்டி ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, அமலாக்கத்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 2023 மே மாதத்தில் அவரது உடல்நல சிக்கல்களின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.
அதற்கு அடுத்த மாதமான 2023 ஜீன் மாதத்தில் இந்த வழக்கில் சரத் சந்திரா ரெட்டி அப்ரூவராக மாறினார். அதன்பிறகு இரண்டு மாதம் கழித்து 25 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு அளித்துள்ளது அரபிந்தோ ஃபார்மா நிறுவனம்.
எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை வெளியிட்டதற்குப் பிறகு இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவால் கைதுக்கு அவரே காரணம் – முன்னாள் குரு அன்னா ஹசாரே
தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!
ரெய்டுக்குப் பிறகு தேர்தல் பத்திரங்களை வாங்கிய 19 நிறுவனங்கள்!
கெஜ்ரிவால் கைது: சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்!