மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலுடன் நடைபெற்றது.
இதில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அருணாச்சலில் மீதமுள்ள 50 தொகுதிகள் மற்றும் சிக்கிமில் உள்ள 32 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மே 19ஆம் தேதி நடைபெற்றது.
முதலில் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் சேர்த்து ஜூன் 4ஆம் தேதியே எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அருணாச்சல் மற்றும் சிக்கிம் இரண்டு பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2ஆம் தேதியே நிறைவு பெறுகிறது என்பதால், ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிக்கிமில் ஆளும் கட்சி முன்னிலை!
சிக்கிமை பொறுத்தவரை மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஆளும் ’சிக்கிம் கிராந்திகாரி மோச்சா கட்சி (எஸ்.கே.எம்) 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான எஸ்.டி.எஃப் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ், பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
அருணாச்சலில் பாஜக முன்னிலை!
அருணாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் பாஜக 41 இடங்களில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.
இதுதவிர தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி) 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம் இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சியே ஆட்சியில் மீண்டும் அமரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை மெட்ரோ: மே மாதத்தில் பயணம் செய்தோர் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: முதுகு வலி… தப்பிக்க இதோ வழி!