தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி போராட்டம் நடத்தியபோது, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான விஷயங்கள்:
22-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தை முன்கூட்டியே யூகித்த காவல்துறை தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பங்குபெறவில்லை.
காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்க சொன்னதாகவும் மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட்டு ஆட்சியர் கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.
காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல், கண்ணீர் புகை குண்டுகள் வெடிக்காமல் துப்பாக்கிச்சூட்டை ஆரம்பித்தனர்.
காவல்துறை துப்பாக்கிச்சூட்டிற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டது என்று காவல்துறை கூறும் கருத்து பொய்யானது.
காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது சரியல்ல என்ற முடிவிற்கு ஆணையம் வருகிறது.
காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது மிருகத்தனமானது.
காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு விலை மதிப்புமிக்க மனித உயிர்களை இழக்கச் செய்து விட்டார்கள்.
ஸ்டெர்லைட் பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில், சில ஆண்கள் ரகசியமாக போராட்டக்களத்தில் நுழைந்து நாச வேலையில் ஈடுபட்டதும், அவர்கள் ஸ்டைர்லைட் நிர்வாகம், காவல்துறை பங்களிப்புடன் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
வலுவான ஆயுதங்களை வைத்திருந்த காவல்துறையினரின் உயிருக்கோ, பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை.
போராட்டக்காரர்கள் தங்கள் மீது கற்களை எறிந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் ஒரு காவல்துறை அதிகாரி மட்டுமே கல் எறிந்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் காயம் அடைந்தவர்களுக்கோ, இறந்தவர்களுக்கோ காவல்துறையினர் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. மோசமான துன்பத்தில் உள்ள ஒரு நபருக்கு யாரும் உதவி செய்யாதது மனத்தை உருக்குகின்ற செயலாகும்.
காவல்துறையின் அணுகுமுறை போராட்டக்காரர்களின் தலையில் அல்லது மார்பில் குறிவைத்து சுட்டு உடனடி உயிரிழப்பை ஏற்படுத்துவது தான் நோக்கமாக இருந்தது.
காவல்துறை Eicher வாகனத்தில் உணவுடன் சேர்த்து ஆயுதங்களையும் கொண்டு வந்துள்ளனர்.
போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். போராட்டக்காரர்கள் விலங்குகள் அல்ல. அவர்களிடம் காட்டில் வேட்டையாடுவது போல் சுடலைக்கண்ணு செயல்பட்டுள்ளார். அவர் புத்திசுவாதீனம் இல்லாதவர் போல் நடந்து கொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்ததாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
செல்வம்
ஆசியக்கோப்பை – பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லுமா?: ஜெய்ஷா பதில்!
புஷ்பா 2 : சமந்தாவுக்கு பதில் தமன்னா?