“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறார்” என முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) சட்டசபையில் தெரிவித்தார்.
மழைக்கால சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் 2வது நாளான நேற்று (அக்டோபர் 18) ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) உரையாற்றினார்.
அப்போது அவர், “இந்தப் பிரச்சினையை அன்றைய அதிமுக அரசு சரியாக கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை.
அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளைக் கேட்டறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை.

துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டதே என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதிசெய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது, அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் (13 பேர்) பலியானது. ’இந்த சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது.
உங்களைப்போல நானும் டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று அவர் பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
’உள்துறையை கையில் வைத்திருந்த நாட்டின் முதலமைச்சர் பேசும் பேச்சா இது’ என நாடே கோபத்தில் கொந்தளித்தது. அந்தளவுக்கு மிகப்பெரிய உண்மைக்கு மாறாக இருக்கக்கூடிய செய்தியை அவர் சொல்லியிருக்கிறார்.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிடுவான்’ என்பதைப்போல, அந்த அளவுக்கு மிகப்பெரிய பொய்யை பழனிசாமி அன்றைய தினம் சொல்லியிருக்கிறார்.
அவர் எவ்வளவு பெரிய பொய் சொல்லியிருக்கிறார் என்பதை, அவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லியிருக்கிறது. அதேநேரத்தில், இந்த ஆணையத்தை திமுக அரசு அமைத்திருந்தால், அதில் அரசியல் இருக்கிறது என்று சொல்லியிருப்பார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது” எனறார்.
ஜெ.பிரகாஷ்
இமாச்சல் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!