ஆறுமுகசாமியின் அறிக்கை புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அன்புமணி ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து பின்னலாடை தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது. கொரோனா காலத்தில் படுக்கை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்றனர்.
95 % பணிகள் முடிந்ததாக கூறப்படும் அத்திகடவு அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை. மக்களின் 60 ஆண்டுகளான கோரிக்கை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். பரம்பிகுளம் டேம் வாய்க்கால் சட்டர் உடைந்து 12 டி .எம். சி., நீர் வீணாகியுள்ளது. இனி இது போன்று நடக்க கூடாது.
பாண்டியாரு புன்னம்புழா, நல்லாறு பாம்பாறு திட்டமும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் சேர்ந்த பிரச்சனை இதை இரு மாநில அரசுகளும் சுமூகமாக பேசி முடிக்க வேண்டும்.
ஒரே நாளில் விவாதம் இல்லாமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனநாயகம் இல்லை. நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெற வேண்டும்.
கடந்த ஆண்டு 30 நாட்களும், அதற்கு முந்தைய ஆண்டு 28 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் நடந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.
தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. முதல்வர் கவனம் செலுத்துகிறார் .ஆனால் அது போதுமானதாக இல்லை. போதுமான அளவு இந்தத் துறையில் காவலர்கள் இல்லை.
ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தேன். கட்டணம் ரூ.3300 ஆனது. ஆனால் ஆம்னி பேருந்தில் ரூ.3,700 ஆக உள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் மாபியா போல விலையேற்றம் செய்கின்றனர். ஒரு வருடத்தில் நான்கு முறை விலை ஏற்றி உள்ளனர். தீபாவளிக்காக டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கிறார்கள்.
டாஸ்மாக் மூலம் வரும் நிதி வளர்ச்சி கிடையாது. வீழ்ச்சி தான். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு வைப்பதற்கு பதில் கல்விக்கு இப்படி இலக்கு வையுங்களேன். தடுப்பூசிக்கு இலக்கு வையுங்கள். குடிக்கு இலக்கு வைக்காதீர்கள். இது அரசுக்கு கேடோ கேடு.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை புரொபஷனல் கிடையாது. இதை வைத்து அரசியல் வேண்டுமென்றால் பண்ணலாம். இதில் டெக்னிக்கலாக ஏதும் சொல்லப்படவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். காவல்துறையினர் இதனை பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டசபையில் அதிமுகவின் இருக்கை தொடர்பான கட்சி சார்ந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
கலை.ரா
ஆவினுக்கு வாராக் கடன் பலகோடி ரூபாய்: அதிர்ச்சிப் பட்டியல்!
234 எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களில் இ-சேவை: முதல்வர் தொடக்கம்!