வைஃபை ஆன் செய்ததும், ட்விட்டர் பொல பொலவென கொட்டியது. ட்விட்டர் இன்பாக்ஸுக்குள் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன.
“இன்று (ஆகஸ்டு 27) ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருக்கிறது.
இதன் அரசியல் ரீதியான விளைவுகள் என்ன?” என்பதுதான் பல கேள்விகளின் ஒற்றைச் சாராம்சம்.
அந்தக் கேள்விகளுக்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் பதிலை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுகவின் குடுமிகளில் ஏற்கனவே சில திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் உள்ளன.
இதில் அடுத்ததாக சேர்ந்திருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை.
2017 செப்டம்பர் மாதம் அணிகள் இணைப்பு விஷயம் சும்மா நடந்ததாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ஓ.பன்னீர் செல்வத்தின் நிர்பந்தத்தின் பேரால் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அமைக்கப்பட்டதுதான் ஆறுமுக சாமி ஆணையம்.
இந்த ஆணையம் பல்வேறு சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து தனது விசாரணையை பல வித நீட்டிப்புகளுக்குப் பின் முடித்து விசாரணை அறிக்கையை தமிழக முதல்வரிடம் வழங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டு அரசியலை கலக்கிய ஜெயலலிதாவின் மரணம் என்பது இன்னமும் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்காமல் வைத்திருக்கிறது.
எனவே ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் என்ன இருக்கப் போகிறது என்பதை அதிமுகவில் இருக்கும் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மட்டுமல்ல அப்போது மத்திய அரசின் பல அமைச்சர்கள், அப்போதைய ஆளுநர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என பல தரப்பினரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்த ஆணையத்தை அமைக்கும்போது அதிமுகவில் இருந்த அரசியல் சூழல் வேறு. இப்போதைய அதிமுகவின் அரசியல் சூழல் வேறு.
ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு பங்கிருக்கிறது என்று அப்போது ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஓப்பனாக குரல் கொடுத்தனர்.
அந்த அடிப்படையில்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த பன்னீர்செல்வம் பல முறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஆஜராகவில்லை.
8 முறை சம்மன் அனுப்பியும் அவர் துணை முதல்வராக இருந்தபோதெல்லாம் ஆஜராகாமல் ஆட்சி போன பிறகுதான் கடந்த மார்ச் 2022 இல் ஆஜரானார்.
அதுபோல சசிகலாவும் இந்த ஆணையத்தில் நேரடியாக ஆஜராகவில்லை. தனது தரப்பு பிரமாணப் பத்திரத்தை அவர் தாக்கல் செய்திருக்கிறார்.
ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டபோது சசிகலாவும் பன்னீரும் எதிரெதிர் நிலைப்பாடில் இருந்தனர்.
ஆனால் ஆணைய விசாரணை இறுதிகட்டத்தை எட்டும்போது ஆணையம் அமைக்க காரணமாக இருந்த பன்னீர்செல்வமே, ‘சசிகலாவின் மேல் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என்று வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் வெளியே பேட்டி கொடுத்தபோது, ‘சசிகலா மீதிருந்த சந்தேகப்பழி நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்க கேட்டேன்’ என்று கூறினார்.
இந்த நிலையில் சமீப காலங்களில் எடப்பாடிக்கு எதிராக பன்னீர், சசிகலா, தினகரன் ஆகியோர் ஒன்றாக சங்கமிக்கும் அரசியல் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அதிமுகவில் மேலும் விளையாடுவதற்காக திமுகவின் கையில் கிடைத்துள்ள இன்னுமொரு துருப்புச் சீட்டு ஆகுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை திமுக ஆட்சியில் தெளிவுபடுத்துவோம் என்று வாக்குறுதியளித்துள்ளார் ஸ்டாலின்.
இந்த வகையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அரசுத் தரப்பினர் முழுமையாக படித்த பிறகே அதுபற்றி ஸ்டாலின் ஓர் முடிவெடுக்கக் கூடும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு நீதிபதி ஆறுமுகசாமி கொடுத்த பேட்டியை சசிகலாவும் பார்த்துள்ளார்.
அதன் பின் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘எந்த பரிந்துரையையும் செய்யவில்லை என்று நீதிபதியே சொல்லியிருக்கிறார். மேலும் நமது தரப்பில் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நம்மீது சந்தேகம் என்று ஆரம்பத்தில் ஆணையத்துக்கு வெளியே சொன்னவர்கள் கூட ஆணையத்துக்குள் நமக்கு எதிராக பெரிதாக முக்கியமாக எதையும் சொல்லிடவில்லை.
அப்படி சிறு சிறு புகார்களை சந்தேகங்களை கிளப்பியவர்களை கூட நமது குறுக்கு விசாரணை மூலம் நாம் வெற்றி கண்டுவிட்டோம்.
மருத்துவர்களின் அறிக்கையும் நமக்கு எதிராக இல்லை. உள்ளபடியே ஓ.பன்னீர்செல்வம் சொன்னது மாதிரியே என் மீது இருந்த களங்கத்தைத் துடைக்கும் விதமாக இந்த அறிக்கை இருக்கும்.
இந்த அறிக்கையை வைத்து திமுக அரசு இரு விதமான காய் நகர்த்தல்களை செய்யலாம். ஒன்று இதை அப்படியே வைத்துவிடலாம். இரண்டாவது இந்த அறிக்கையை வெளியிடலாம்.
வெளியிட்டு அதில் எனக்கு எதிராக எதுவும் இருக்கப் போவதில்லை. அது எனக்கு ஒரு அரசியல் ரீதியான ரீ என்ட்ரியைக் கொடுக்கும். என் மீதான களங்கம் துடைத்து எறியப்படும்.
இப்போதைய சூழலில் என்னை எதிர்க்கும் எடப்பாடிக்கு அது மேலும் நெருக்கடியைக் கொடுக்கும். இதை அரசு சீக்கிரம் வெளியிட்டால் நமக்கு நல்லதுதான்’ என்று தெரிவித்திருக்கிறார் சசிகலா.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைவில் வெளியிட்டால் அதை அடிப்படையாக வைத்தே பன்னீரும், சசிகலாவும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவல்களும் அரசுத் தரப்புக்கு கிடைத்துள்ளன.
இந்த பின்னணியில்தான் இந்த அறிக்கை குறித்து வரும் 29 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார் முதல்வர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஃபேஸ்புக் மெசஞ்சர் சைன் அவுட் ஆனது.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி பறித்த அதிமுகவை சசிகலாவிடம் ஒப்படைப்பேன் -ஓபிஎஸ்