வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பற்றி கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி தமிழக அரசின் அமைச்சரவை கூட்ட முடிவு பற்றிய அதிகாரபூர்வ செய்திக் குறிப்புகளின் ஸ்க்ரீன் ஷாட் வந்து விழுந்தது.
அதைப் பார்த்த வாட்ஸ் அப், அதில் இரண்டாம் பக்கத்தை மட்டும் சற்று நேரம் ஊன்றிப் படித்துவிட்டு டைப் செய்யத் தொடங்கியது.
“ஆகஸ்டு 29 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அறிக்கை, ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வி.கே. சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது,
அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,
அதன் பிறகு உரிய விவர அறிக்கையுடன் ஆணைய அறிக்கை சட்டப் பேரவை முன் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.

இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்ட ரீதியாக என்ன விளைவை ஏற்படுத்தும், அரசியல் ரீதியாக என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது பற்றிய விவாதங்கள் அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் தீவிரமாக இருக்கின்றன.
இந்த நிலையில்தான் சசிகலா தரப்பும் அப்பலோ தரப்பும் ஆணையத்தின் அறிக்கையின் அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சட்ட ரீதியாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு, அரசிடம் பரிந்துரை செய்வதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை.
ஒருவேளை ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவந்து நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலோடு அமைத்திருந்தால் அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடைத்திருக்கும்.
ஆனால் இதை வெறும் அறிவிப்பு ஆணை மூலம் எடப்பாடி அரசு வெளியிட்டு அமைத்ததால் பல் இல்லாத பாம்புதான் இந்த ஆறுமுகசாமி ஆணையம் என்கிறார்கள்.
எனவே இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அரசு தனது விசாரணை அமைப்புகள் மூலமாக விசாரணையைத் தொடங்கினால்தான் அந்த விசாரணைக்கு சட்ட அந்தஸ்து கிடைக்கும்.
ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றம் சென்று உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பேரில்தான் எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அப்பல்லோ மருத்துவர்களின் அறிக்கையை ஆராய்ந்து ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த பிழையும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை எப்படி வெளியானது என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்குள்ளேயே அப்போது விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான் ஆகஸ்டு 29 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை முதல்வரிடம் வழங்கினார்.

இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பற்றி அரசு வெளியிட்ட அறிக்கையில் ‘சசிகலா, சிவக்குமார், விஜயபாஸ்கர், ராம் மோகன் ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த ‘உள்ளிட்டவர்கள்’ என்பதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கேள்வி. ஆறுமுகசாமி ஆணையம் யார் யார் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறதோ அவர்கள் அனைவரின் பெயரையும் அமைச்சரவை கூட்ட செய்திக் குறிப்பில் அரசு வெளியிடவில்லை.
மாறாக ’உள்ளிட்டவர்கள்’ என்ற வார்த்தை மூலம் அந்த விசாரணை பரிந்துரைப் பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
இதன் மூலம் அரசு இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறது என்று சசிகலா தரப்பில் உறுதியாக சொல்லுகிறார்கள்.

அரசியல்வாதிகளான சசிகலா, விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் டாக்டராக இருந்த சிவகுமார், ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் ராம் மோகனராவ் ஆகியோரது பெயரை வெளியிட்ட அரசு, ’உள்ளிட்டவர்கள்’ என்ற வார்த்தை மூலம் வேறு சிலரை மறைக்கிறதா பாதுகாக்கிறதா என்ற கேள்விகளை சசிகலா தரப்பினர் எழுப்புகிறார்கள்.
அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் சிலரது பெயர்களையும் விசாரிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஆறுமுகசாமி ஆணையம் சேர்த்திருப்பதாக தெரிகிறது.
ஆனால் தமிழக அரசு அவர்கள் பெயரை வெளியிடாமல் தனது அரசியல் விளையாட்டுக்காக அவர்களின் பெயரைத் தவிர்த்திருக்கலாம் என சசிகலா தரப்பினர் சொல்கிறார்கள்.
அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை விசாரிக்க சொன்ன ஆணையம் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் விசாரிக்குமாறு பரிந்துரை செய்ய 100 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.
அவர் தற்போதும் அரசு அதிகாரியாக இருப்பதால் அவரது பெயரை உள்ளிட்டவர்கள் என்ற வார்த்தை மூலம் மறைத்துவிட்டதோ அரசு என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் சசிகலா தரப்பினர்.
இப்போதைய நிலவரப்படி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்ட வல்லுநர்களிடம் ஒப்படைத்து 2024 தேர்தலுக்குள் அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரும் சூழல் வந்தால் அதை அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவது என்ற திட்டத்தில் இருக்கிறது திமுக அரசு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஆறுமுகசாமி விசாரணை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல்?