அலறவிட்ட ஆணையம்: எய்ம்ஸ் விட்ட தூது!

Published On:

| By Kavi

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஒரு பக்கம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய அளவிலான மருத்துவ வட்டாரங்களிலும் இந்த அறிக்கை விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த ஆணையத்தின் விசாரணைக் காலங்களிலேயே எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் கடுமையான தருணங்களை ஆணையத்தில் எதிர்கொண்டனர் என்கிற தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவக் குழு பற்றி கூறப்பட்ட கருத்துகளால், இந்தியாவின் மிக உயர்ந்த மருத்துவ அமைப்பான எய்ம்ஸ் வட்டாரங்களிலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவக் குழு பற்றி கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.


“ஆணையத்தால் 16-2-22 அன்று புதிய நீதிமன்ற அறையில் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பல்லோ மருத்துவமனை(R2) தரப்பு வழக்கறிஞர் கே.மனோஜ் மேனன் அனைத்து மருத்துவ பதிவுருக்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் விசாரணை ஆணையத்தால் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.

மிகவும் சுவாரசியமான கேள்வி என்னவென்றால் 14-2-22 அன்று எய்ம்ஸ் மருத்துவக் குழு எடுத்த முடிவு 25-2-22 அன்றுதான் இந்த ஆணையத்துக்குக் கிடைத்தது.

இது ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே அப்பல்லோ மருத்துவமனைக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது.

அதனால்தான் 16-2-22 அன்று ஆணையத்தின் முன் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததற்கு மருத்துவக் குழுதான் காரணம் என்பதும், இது எய்ம்ஸ் மருத்துவக் குழுவிற்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே உள்ள தொழில் முறை தொடர்பைத் தெளிவாக நிரூபிப்பதாக அமைகிறது” என்று குறிப்பிட்டுள்ளது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்,

எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் பற்றியும் அவர்களுக்கும் அப்பல்லோவுக்கும் தொழில் முறை உறவு இருக்கிறது என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு பற்றி மேலும் பல விமர்சனங்களையும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறிப்பிட்டது டெல்லி எய்ம்ஸ் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து எய்ம்ஸ் உயர் மட்ட டாக்டர்கள் தமிழக சுகாதாரத்துறையில் இருக்கும் தங்களுக்கு அறிமுகமான சிலரைத் தொடர்புகொண்டு அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்கள்.

Arumugasamy Commission report Voices of Dissatisfaction AIIMS

“எய்ம்ஸ் என்பது இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையை நிராகரிக்கவோ விமர்சிக்கவோ ஆறுமுகசாமி மருத்துவ நிபுணராக இருக்க வேண்டும்,

அல்லது அவராகவே தேர்ந்தெடுத்து எந்த ஓர் உலக அளவிலான மருத்துவ நிபுணரிடம் ஆலோசித்திருக்கலாம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கை மீது சந்தேகம் இருந்திருந்தால் இன்னும் விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கலாம்.

உலகத்தில் மிக அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களை வைத்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையில் தவறு உள்ளதா என்று ஆராய்ந்திருக்கலாம். ஆனால் எதுவும் இல்லாமல் எவ்வித முகாந்திரமும் ஆதாரமும் இல்லாமல் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் பற்றி அவதூறு செய்திருக்கிறது ஆணையம்.

ஆறுமுகசாமியின் தனிப்பட்ட கருத்துகள் எய்ம்ஸ் நிறுவனத்தின் இறையாண்மையைப் பாதிப்பதாக அமைந்து வலியை ஏற்படுத்துகிறது. இதை தமிழக அரசு எப்படி அணுகப் போகிறது என்பதை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்”,

என்று தமிழக சுகாதாரத்துறையில் இருக்கும் சில உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு எய்ம்ஸ் நிறுவன உயர்மட்டத்தினர் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளார்கள்.

இதைத் தமிழக அரசின் மேலிடத்துக்குத் தமிழக சுகாதாரத்துறையினர் பாஸ் செய்திருக்கிறார்களாம்.

அதே நேரம் ஆறுமுகசாமி ஆணையர் வட்டாரங்களிலோ, “எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆவணங்களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அப்பல்லோ தரப்புக்கும் எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பவை இயல்பானவை தான். அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின் வழிவந்த கருத்துகள் தான் ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ளன” என்கிறார்கள்.


-வேந்தன்

யார் பிடியில் தமிழ் நியூஸ் சேனல்கள்?

சீறி வந்த துப்பாக்கி குண்டுகள்: உயிர் தப்பிய மீனவர்களின் கண்ணீ்ர பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel