ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நாளை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஓ.பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது ஆறுமுகசாமி ஆணையம்.
எய்ம்ஸ் மருத்துவக்குழு, தனது அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைத்தது.
ஆணையம் மேற்கொண்ட விசாரணை மற்றும் எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.
இந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்.
மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை அவகாசம் வாங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் மருத்துவக் குழு இறுதி அறிக்கை கூறுவது என்ன?