ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்குப் பின் சசிகலா நிலை: டிடிவி தினகரன்

அரசியல்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தொடர்பாக சசிகலா சட்ட ரீதியாக எதிர்கொள்வார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியான நிலையில் சசிகலா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 18) இரவு சசிகலாவை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விசாரித்தார்.

15 நிமிட சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். அங்கிருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வந்து கொடுத்த ஒப்பீனியனையே ஆணையம் நிராகரித்திருக்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.

அதேபோல அப்பல்லோ மருத்துவமனை என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கிற மருத்துவமனை. அப்பல்லோ மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சசிகலா, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் அரசியல்வாதிகள். அதனால் அவர்கள் மீது குற்றம்சாட்டுவதாக வைத்துக்கொள்வோம். ஏனென்றால் இது அரசியல் ரீதியாக அமைக்கப்பட்ட ஆணையம்.

ஆனால் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படக் கூடியவர். எந்த அரசாங்கத்திலும் முக்கியமான பொறுப்பில் இருக்கக் கூடியவர்.
சுனாமி காலத்தில் அவர் கலெக்டராக இருந்த போது எங்களுடன் சேர்ந்து பிணங்களை எல்லாம் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய உதவியவர்.

அவர் மீதே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். சரி, தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்கிறது என பார்ப்போம். எல்லாத்தையும் எதிர்கொள்வதுதான் இயல்பு” என்றார்.

ஓபிஎஸின் தர்மயுத்தம் குறித்த கேள்விக்கு, “அம்மாவின் மரணத்துக்குப் பின் இதுபோன்ற பிரச்சாரங்களைக் கிளப்பியதே கோயபல்ஸ் திமுகதான். இதை பன்னீர் செல்வமும் கையிலெடுத்தார்.

அவர் தொடங்கி வைத்தது ஆணையத்தில் முடிந்தது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படிதான் எய்ம்ஸ் மருத்துவர்கள் இங்கு வந்தார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஊடகங்கள் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையையும் போடுங்களேன் என்று குறிப்பிட்ட அவரிடம், “ 2012க்கு பிறகு சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் நல்ல நட்பு கிடையாது.

அந்த அடிப்படையில் கூட இந்த சம்பவம் நடந்திருக்குமா. ஜெயலலிதா மயங்கி விழுந்து 3 நாட்கள் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறதே” என்ற கேள்விக்கு,

“2011 டிசம்பரில் என்னை அம்மா நீக்கிவிட்டார். 2016 செப்டம்பர் 25தான் அம்மாவை பார்த்தேன். மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த போது பார்த்ததுதான். இடைப்பட்ட ஆண்டுகளில் நான் அவரை பார்க்கவில்லை. என்னைவிட சசிகலா இந்த கேள்விக்குப் பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும்” என்று கூறினார்.

சசிகலாவின் மன நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “அவர் சாதாரணமாகத் தான் இருக்கிறார். இந்த அறிக்கைக்காக நான் பார்க்க வரவில்லை. எப்போதும் தீபாவளி பொங்கல் நேரத்தில் அவர்களைச் சந்தித்து ஆடை கொடுத்து பார்க்க வருவேன்.

சகோதரி, மகள்களுக்கு வரிசை கொடுப்பது எங்கள் வழக்கத்தில் உள்ளது. அப்படித்தான் இன்றும் வந்து பார்த்தேன். இவ்விவகாரத்தில் பதில் சொல்கிறேன் என்று சசிகலா சொன்னார்” என்று கூறினார்.

ஜெயலலிதா இறப்பு தேதி குறித்த கேள்விக்கு, “இறப்பு தேதியில் எவ்வித குழப்பமும் இல்லை. அப்பல்லோ மருத்துவமனையில் அவ்வளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு எனக்கு தகவல் வந்தது. அம்மாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்ததும் மருத்துவர்கள் முதலுதவி கொடுத்தார்கள்.

6 மணிக்கு மேல் நான் மருத்துவமனைக்குச் சென்ற போது எக்மோ பொருத்தியிருந்தார்கள். சிவியர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. எக்மோ கருவி பொருத்தியிருந்ததால் நம்பிக்கை வைத்து 72 மணி நேரம் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் பேசிக்கொண்டனர்.

ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை ஏற்படாததால் அறிவித்துவிட்டார்கள். அதுதான் எனக்குத் தெரிந்த தகவல்.

எய்ம்ஸ் அறிக்கையே நிராகரிக்கப்பட்டுள்ளது. சசிகலா உட்பட அனைவரும் சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள். இது அரசியலுக்காக அமைக்கப்பட்ட ஆணையம்” என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமிக்குத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நொடிக்கு நொடி தகவல் தெரிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “அதுதான் உண்மை. அவர் சமாளித்தார்” என்று பதிலளித்தார்.

ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கையைச் சத்தமே இல்லாமல் வைத்திருப்பது ஏன்? எல்லாமே அரசியல் தான். எல்லோரும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்வார்கள் என்றார் டிடிவி தினகரன்.

அண்ணன் எடப்பாடி பயத்தால் என்ன செய்வது என தெரியாமல் நாளை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

பிரியா

சட்டமன்றத்தில் அதிமுக ஆடிய சடுகுடு: வேடிக்கை பார்த்த திமுக!

பதவிக்காக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பன்னீர்: வச்சி செஞ்ச ஆறுமுகசாமி ஆணையம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *