எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?: ஓபிஎஸ் தரப்பு கேள்வி!

அரசியல்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இரவு, ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை குறித்துப் பேசிய அவர்கள், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டுச் சிகிச்சை அவசியம் என்று கூறியவர் பன்னீர் தான்” என்று கூறினர்.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆணைய அறிக்கையும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையும் வெளிவந்து 6 நாட்கள் ஆகப்போகிறது.

தமிழக அரசு உடனடியாக ஆறுமுகசாமி ஆணையம் கூறியவர்கள் மீது விசாரணை நடத்த அரசாணை பிறப்பித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு அதிமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிக்கை வெளியாகி 6 நாட்கள் ஆகியும் கூட அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மவுனமாய் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்த முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று கூறியிருந்தார்.

இன்று ஆணைய அறிக்கை வந்த பிறகு கூட எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. எனவே இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்டு,

இரு அமர்வு பெஞ்ச்சை அமைத்து 6 மாத காலத்துக்குள் விசாரணை நடத்தித் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், “எம்.ஜி.ஆரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றது போல் ஏன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது அமைச்சரவையைக் கூட்டி, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, பிரதமர் மோடியைச் சந்தித்துத் தனி விமானம் ஏற்பாடு செய்யச் சொல்லி , வெளிநாடு அழைத்துச் சென்று சிறப்பான சிகிச்சை கொடுத்து, அறுவை சிகிச்சை செய்திருந்தால் அம்மா இன்னும் 10, 15 ஆண்டுக் காலம் உயிரோடு இருந்திருப்பார்.

அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த அனைவரும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தான்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது, வேலுமணி, தங்கமணி உட்பட மூத்த அமைச்சர்களை அழைத்து அம்மாவை வெளிநாடு அழைத்துச் செல்வோம் என்று ஓபிஎஸ் சொன்னார்.

அப்போது அவர்கள், கலந்து பேசுவோம் என்று சொன்னார்களே தவிர, 5 ஆண்டுகளுக்கு அமைச்சராக இருக்க வேண்டும் என்று பதவி வெறிபிடித்து அலைந்தார்களே தவிர அம்மாவைக் காப்பாற்ற எந்த அமைச்சரும் சிந்திக்கவில்லை.

சசிகலாவும், ஓபிஎஸும் தான் அம்மாவுக்கு வைத்தியம் பார்த்ததில் பொறுப்பு என்று ஜெயக்குமார் கூறுகிறார். அப்படிப்பட்ட ஜெயக்குமார் அமைச்சர் பதவி தேவையில்லை என்று தூக்கி வீசிவிட்டு வெளிப்படையாகப் பேசாதது ஏன்?.

ஒரு அமைச்சர் கூட அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்படவில்லை.
ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதைச் செய்யவில்லை. இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை.

நுரையீரலிலிருந்து தினசரி ஒரு லிட்டருக்கு மேல் நீர் எடுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் அதை குணப்படுத்த எதையும் செய்யவில்லை. முறையாக மருத்துவம் செய்யவில்லை.

அன்று சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், துறை செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என அனைவரும் மருத்துவமனையில் தான் இருந்தனர்.
ஆனால் இவர்கள் மருத்துவரிடம் பேசி ஜெயலலிதாவைச் சந்தித்திருக்க வேண்டும்.

அப்பல்லோ மருத்துவமனையைவிட எந்த மருத்துவமனை சிறப்பானதோ அதற்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்திருக்க வேண்டும். அல்லது சிறந்த மருத்துவர்களை அழைத்து அப்பல்லோவிலேயே அறுவை சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை.

வெளியிலிருந்து உணவு எடுத்து வரக் கூடாது என்று சொல்லும் அப்பல்லோ மருத்துவமனை, அம்மாவுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தும் எதற்கு ஐஸ் க்ரீம், இனிப்புகள் எடுத்து வர அனுமதித்தது. அம்மாவைக் கொல்ல வேண்டும் என்பதற்காகவே இனிப்புகள் கொடுக்கப்பட்டதா என்பதுதான் எனது கேள்வி.

அப்பல்லோ மருத்துவமனைக்குச் சீல் வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அம்மாவைக் காப்பாற்றாதவர்கள், இதய தெய்வம் என்று இனி சொல்லக் கூடாது. பணத்துக்கும் பதவிக்காகவும் இதுபோன்று செய்துவிட்டனர்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
பிரியா

அலறவிட்ட ஆணையம்: எய்ம்ஸ் விட்ட தூது!

யார் பிடியில் தமிழ் நியூஸ் சேனல்கள்?

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *