ஆறுமுகசாமி ஆணையம் கடந்து வந்த பாதை!

அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த அறிக்கை சட்டமன்றத்தில் இன்று (அக்டோபர் 18) வெளியிடப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று (அக்டோபர் 17) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அந்த ஆணையம் கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்போம்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பார்க்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உட்பட பலரும் ஜெயலலிதா நலமாகவே இருப்பதாகத் தெரிவித்து வந்தனர்.

ஆனால் டிசம்பர் 5, 2016 அன்று இரவு ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.

அனைத்து சேனல்களும் இந்த செய்தியை ஒளிபரப்ப அதிமுக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது.

ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையிலிருந்த போது என்ன நடந்தது என்று இன்று வரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

அதே சமயத்தில் மருத்துவமனையிலிருந்த போது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். பின்னாளில் அது பொய் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

இந்தச்சூழலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக 2017 பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

arumugasami commission jayalalitha death investigation report

இதையடுத்து 2017 செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் வரவேற்றது.

அடுத்த ஒரு மாதத்தில் அதாவது 2017 அக்டோபர் 25ஆம் தேதி விசாரணையை தொடங்கியது ஆறுமுகசாமி ஆணையம். முதலாவதாக மருத்துவர் சரவணனிடம் விசாரணை நடத்தியது.

தொடர்ந்து ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய பலருக்குச் சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்கியது ஆறுமுகசாமி ஆணையம்.

சாட்சிகளிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

யார் யாரிடம் விசாரணை

arumugasami commission jayalalitha death investigation report

முன்னாள் தலைமைச் செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகனராவ், முன்னாள் டிஜிபி ராமானுஜம், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக், டாக்டர் பாலாஜி, ஜெயா டிவி மேலாண் இயக்குநர் விவேக்,

ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஜெயலலிதாவின் சமையல்காரர் சேகர், மற்றொரு கார் ஓட்டுநர் ஐயப்பன், குடும்ப டாக்டர் சிவக்குமார், ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியராக இருந்த சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த சாந்தா ஷீலா நாயர், உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது.

2018 டிசம்பர் 18ஆம் தேதி ஜெயலலிதா மரண வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆஜரானார்.

ஜெயலலிதாவின் கால் வெட்டப்பட்டதாகவும், முகத்தில் ஆணி அடிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தவர் பொன்னையன். அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது, செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு கூறினேன் என்று பொன்னையன் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

2018 மார்ச் மாதம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 4 முறை சம்மன் அனுப்பப்பட்ட பிறகு 21 ஜனவரி 2019ஆம் தேதி ஆஜரானார்.

சிறைக்குச் சென்று வந்த பிறகு சசிகலா உறவினர் இளவரசியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ரூ.6.85 கோடி செலவானதாக அப்பல்லோ தரப்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தடையும் நீக்கமும்

arumugasami commission jayalalitha death investigation report


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கத் தமிழக அரசு சாராத நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும் என்று 2019 பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை வழக்குத் தொடர்ந்தது.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 90 சதவிகிதம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்துவிட்டதாக கூறி , 2019 ஏப்ரல் 4ஆம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2019 ஏப்ரல் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது அப்பல்லோ நிர்வாகம்.

மருத்துவர்கள் குழு அமைத்த பிறகுதான் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. இதையடுத்து 2019 ஏப்ரல் 26ஆம் தேதி ஆறுமுகசாமி விசாரணைக்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கில் தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

பல மாதங்களாக விசாரணைக்கு வராமல் இருந்த இந்த வழக்கு 2021 ஜூலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ஆறுமுக சாமி ஆணையத்துக்கு மாதம் தோறும் 6 லட்ச ரூபாய் செலவாகிறது. விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் டிசம்பர் 20, 2021 எய்ம்ஸ் மருத்துவக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஆணையத்தின் மீதான தடையை நீக்கியது.

608 பக்க அறிக்கை

arumugasami commission jayalalitha death investigation report

அதுவரை, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பிய பன்னீர்செல்வம் ஆஜராகாமலிருந்த நிலையில், 2022 மார்ச் 21ஆம் தேதிதான் முதன்முறையாக ஆஜரானார். அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என்று அவர் பதிலளித்ததாகவும் தகவல் வெளியானது.

5 ஆண்டுகளில் 14 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இறுதியாக 500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், 608 பக்கங்கள் தமிழிலும் கொண்ட அறிக்கை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

.மொத்தம் 154 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார். அதுபோன்று சசிகலாவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகக் கூறினார்.

arumugasami commission

இந்த விசாரணை அறிக்கையில் பல பிரச்சினை இருக்கிறது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

பிரியா

அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் போட்ட கன்டிஷன்!

காங்கிரஸ் தேர்தலில் 90% வாக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *