இலவசத்தால் வாழ்ந்தோமா ? வீழ்ந்தோமா ?

அரசியல்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்கள், வாக்குறுதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா குழுவின் முன் விசாரணையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கில் கருத்து தெரிவித்த என்.வி. ரமணா இலவசங்களும் சமூக  நலத்திட்டங்களும் வெவ்வேறானவை, இலவசங்களால் அரசு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பாக பிரதமர் மோடியும் ‘ மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாசாரமாக இருக்கிறது. ‘தேர்தல் நேரத்து இலவசங்கள் ஆபத்தானவை’ என பல்வேறு காலகட்டங்களில் சமூகநல இலவச திட்டங்களுக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்தே வந்திருக்கிறார்.

ஆனால் மோடியின் இந்த கூற்று சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது. சர்கார் திரைப்படத்தில் கூட இலவச பொருட்களை உடைத்து தீக்கிரையாக்குவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

உண்மையில் இலவசங்களால் பொருளாதாரம் வீழுமா? இலவச திட்டங்களே தேவையில்லையா? இந்த திட்டங்களால் அடைந்த மாற்றங்கள் என்ன ? என்பதை ஆராய்கிறது இந்த தொகுப்பு..

தமிழ்நாடு இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக இருக்க காரணம் இலவச சத்துணவு திட்டம் முதல் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தியது தான் காரணம் என்பதை உறுதி செய்கின்றன புள்ளி விபரங்கள்..

article about election and freebies

உதாரணமாக இலவச மதிய உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய போது  இத்திட்டம் பெரும்பாலனவர்களால் ‘கவர்ச்சித் திட்டம்’ என்றே விமர்சிக்கப்பட்டாலும், இதுவே பின்னர் தேசிய மதிய உணவு திட்டத்திற்கான முன்னோடியாக அமைந்தது.

இன்று தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்ல, சீருடை, பாடப்புத்தகங்கள், சைக்கிள், லேப்டாப்  மற்றும் உடல்நலம் பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

article about election and freebies

இவற்றை வெறும் இலவசத்தோடு மட்டும் சுருக்கி பார்க்க கூடாது. இதன் முக்கியமான விளைவாக, ஏழ்மை குறைய ஆரம்பித்ததுடன் பள்ளிக்கூடங்களில் சேர்க்கை அதிகரித்து இடைநிற்றலும் வெகுவாக குறைந்தது.

2019 – 2020 ஆம் ஆண்டுக்கான இடைநிற்றல் விகிதம் இந்திய அளவில் 2.6 ஆக இருக்கும் போது தமிழ்நாடு அரசின் இடைநிற்றல் விகிதம் 0.4 சதவிகிதமாக உள்ளது.

மேலும் உயர்கல்வியில் சேர்பவர்களின் விகிதம் (Gross Enrolment Ratio (GER) வில் இந்தியாவை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது தமிழ்நாடு. இந்திய அரசின்  GER விகிதம் 27.1 ஆனால் தமிழ்நாடு அரசின் GER விகிதம் 51.4 ஆக இருக்கிறது.

article about election and freebies

சர்வதேச அளவில் சீனா, மலேசியா, குவைத் போன்ற நாடுகளை விட தமிழ்நாடு உயர்கல்வி சேர்பவர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்க காரணம் சமூக நலத்திட்டங்களே..

1967-ல் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று அண்ணா ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்த திட்டம் இன்று வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு இலவசமாக 20 கிலோ அரிசி தரும் நிலைக்கு வந்திருக்கின்றது.

article about election and freebies

உணவு வழியாக இயங்கிய அதிகாரக் கட்டமைப்பு தகர்ந்துபோனதற்குக் காரணமே, உணவு எல்லோருக்கும் வழங்கப்பட்டதுதான். ஆகவே, உணவுப் பாதுகாப்பு வெறும் வறுமையை மட்டும் ஒழிப்பதல்ல; அது உணவு வழியாக செயல்பட்ட அதிகாரத்தை நொறுக்கியது என்கிறார் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்.

இங்கே இலவச திட்டங்கள் என்று சிலரால் விமர்சிக்கப்படும் திட்டங்கள் மக்களின் சுயமரியாதையை மீட்கும் திட்டங்களாகவும் இருந்துள்ளது என்பது மிக முக்கியமானது.

கலைஞர் கொண்டுவந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் போன்றவை அவர்களின் வாழ்வாதாரத்தை பெரும் அளவில் உயர்த்தியது.

அதுபோல கலைஞரால் கொண்டுவரப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டம், இலவச எரிவாயு இணைப்பு திட்டம், ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட விலையில்லா கிரைண்டர், மிக்சி, ஃபேன் கிராமப்புறப் பெண்களுக்குக் கால்நடைகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மகளிருக்கு இலவச பேருந்து திட்டம், கல்லூரி பெண்களுக்கு ஆயிரம் நிதிஉதவி போன்ற திட்டங்கள் கிராமப் புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையே பெருமளவில் மாற்றி போட்டது என நிச்சயமாக சொல்லலாம்.

குறைந்த காலகட்டத்துக்குள் தனிநபர் வருமானம், கல்வி விகிதாசாரம், மனித வள குறியீடு, ஏழ்மை சதவிகிதத்தை குறைத்தது என  பல்வேறு தளங்களிலும் தமிழகம் முன்னிலையில் இருக்க காரணம் தமிழ்நாடு அரசின் செயல்திட்டங்களே என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள் அமர்தியா சென்னும், ழீன் தெரசேவும்.

article about election and freebies

தமிழ்நாடு அரசின் வளர்ச்சியை கண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தேர்தல் சமயத்தில் இலவச திட்டங்களை அறிவித்து வருகின்றன.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார் ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச பாஜக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாடு அரசின் திட்டங்களை பின்பற்றி  60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், அனைத்து விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனத்துக்காக இலவச மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

article about election and freebies

தற்போது நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை,  இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உதவி தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இதன் காரணமாகவே தற்போது சமூக நலத்திட்டங்களை இலவசம், மோசமான கலாச்சாரம் என விமர்சித்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆனால் ஏழை பணக்காரர் என வேறுபாடின்றி அனைவரிடமும் வரி வசூலிக்கும் இந்தியா போன்ற நாட்டில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இலவச திட்டங்கள் தேவை என்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

மேலும் இத்திட்டங்களை  வளர்ச்சிக்கு தடையானவையாக பார்க்காமல் சமூக மேம்பாட்டுக்கான முதலீடாகவே அணுக வேண்டும். எனவும் அத்திட்டத்தை செயல்படுத்தும்போது யாரெல்லாம் பயனாளிகள் என்று அரசு கண்டறிய வேண்டும் என சொல்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

article about election and freebies

இந்த இலவச திட்டங்கள் குறித்து திஇந்து நாளிதழுக்கு ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியர் பேரா.நா.மணி அளித்த பேட்டியில்,

கல்வி, சுகாதாரம், திறன் மேப்பாட்டு பயிற்சிகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை எல்லாம் நோக்கி நகர்வதுதான் நல் அரசு. ஆனால், இதை ஒரே நாளில் செய்ய முடியாது. இது ஊழலற்ற ஆட்சியால் உறுதி செய்ய முடியும். அப்படியான சூழல் உருவாகும்போது இலவசங்களுக்கான ஆதரவு படிப்படியாக ஒழியும். இலவசங்களால் பொருளாதாரம் வீழ்ந்துவிடாது. பொருளாதாரத்தை சீர்படுத்தினால் இலவசங்களுக்கான தேவையே இருக்காது. என்கிறார்

திட்டங்களை நெறிப்படுத்துவதும், அதற்கு ஏற்றது போல பொருளாதாரத்தை சீர்படுத்துவதுமே ஓர் நல்லரசின் கடமை.

  • க.சீனிவாசன்

தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ.340.97 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *