ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று (டிசம்பர் 11) தீர்ப்பளிக்கிறது. article 370 jammu and Kashmir case judgement
அரசியல் சாசனம் 370-வது பிரிவின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
அதன்படி காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமான லடாக் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
காஷ்மீருக்கு சட்டப்பேரவை உள்ள நிலையில், 4 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட், எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றலாம், சிறிய மாநிலங்களை உருவாக்க பெரிய மாநிலத்தின் எல்லைகளை பிரிக்கலாம்.
ஆனால் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு மாநிலம் என்றுமே, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “2019-ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து ஜம்மு காஷ்மீர் முன்னெப்போதும் இல்லாதவகையில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்ட விதிகள் மீறப்படவில்லை” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவானது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாகனங்கள் விலையை 3 சதவிகிதம் உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் வைத்து தலைக்குக் குளிப்பது சரியா?
article 370 jammu and Kashmir case judgement