அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் ஜனவரி 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட சிலர் மீது சிறுமியின் பெற்றோர் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் எங்களை தாக்குவதாகவும் குறிப்பாக அந்த சிறுவன் பெயரை நீக்க சொல்லி போலீசார் அடிப்பதாகவும் சிறுமியின் தாயார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
“சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ் எனும் தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்தான். அவர் மீது போலீஸ் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த வழக்கு விசாரணைக்காக இரவு 12 மணிக்கு இன்ஸ்பெக்டர் என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்று கையை முறுக்கி அடித்ததாகவும், இரவு ஒரு மணி அளவில் மருத்துவமனைக்கு சென்றால் ஐசியூ வார்டுக்கு பக்கத்தில் இருக்கும் லிப்டின் ஓரத்தில் என் மகளை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பெற்றோர் யாரும் உடன் இல்லை. இப்படி எல்லாம் விசாரிக்கலாமா?” என்றும் சிறுமியின் தாயார் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. விசாரணையின் முடிவில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டால் குறைந்தது ஐந்து முதல் ஏழு வருடங்களுக்குப் பிறகு கூட முடிவை யாரும் அறிந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை காவல்துறை இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் சரோஜ் குமார் தாக்கூர், அண்ணா நகர் காவல் ஆய்வாளர் எஸ் ராஜி மற்றும் அண்ணா நகர் 103 வது வார்டு அதிமுக செயலாளர் சுதாகர் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.
போக்சோ வழக்கில் முறையான விசாரணை நடத்தவில்லை என்று காவல் ஆய்வாளர் ராஜியும், குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் சதீஸுக்கு உதவியதாக அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் எழும்பூரில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஜனவரி 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதாகி உள்ள வட்டச் செயலாளர் சுதாகரை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கருப்பு சட்டை-வெள்ளை மாஸ்க்… சட்டமன்றத்தில் அதிமுகவின் அதிரடி என்ட்ரி!