”செந்தில்பாலாஜியை கைது பண்ணனும்”: பிரேமலதா

அரசியல்

ஸ்காட்லாந்துக்கு நிகரான தமிழக காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறி உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இந்தியாவிற்காக விளையாடிய பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

அவர்கள் துறை சார்ந்தவர்கள் மூலம் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கான நல்ல ஒரு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற வீரர்களை காவல்துறையினர் தடுத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மேகதாது அணை கட்டுவதற்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். தேமுதிக சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய மோதல் உருவாகும். ஏற்கனவே தமிழகம் பாலைவனமாக திகழ்கிறது மேகதாது அணை கட்டப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும். கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டது பெரிய விஷயம் அல்ல. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பெற்று தர வேண்டும்” என்றார்.

அப்போது அவரிடம், வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “இதுதான் திராவிட மாடல். ரெய்டு வரும் அதிகாரிகள் தங்களது கடமையை ஆற்ற வருகிறார்கள். எந்த அதிகாரியும் ரெய்டு வருகிறோம் என அறிவித்து விட்டு வரமாட்டார்கள்.

அதிகாரிகள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரான தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறி உள்ளது.

இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும். அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக செங்கோல் உள்ளது. இதற்கு முன் செங்கோல் எங்கு இருந்தது.? செங்கோல் விவகாரம் ஒட்டுமொத்த தமிழர்களின் புகழ் போற்றப்பட வேண்டும் அதை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், ”முதல்வரின் துபாய் பயணத்தின் போது எத்தனை தொழிற்சாலைகள் எத்தனை முதலீடுகள் கொண்டு வந்தார்? எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுத்தார்? நேற்று இரவு தான் தமிழகம் திரும்பி உள்ளார்.

அதற்குள் பயணம் வெற்றி பெற்றுவிட்டது என கூறுகிறார். ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம், தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் வழங்குகிறார் என்பதை பார்ப்போம். அதன் பின் பேசலாம்” என்றார்.

இராமலிங்கம்

ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுநர்!

இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் முட்டைகளுக்கு எதிர்ப்பு!

"Arrest Senthilbalaji" : Premalatha
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *