செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமலாக்கத் துறை, சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள இல்லம், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறை ஆகிய இடங்களில் சோதனை செய்த அமலாக்கத் துறை நேற்று இரவு விசாரணைக்கு நுங்கம்பாக்கதில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது. அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தசூழலில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 14) ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முறையீடு செய்தார். அவரது சார்பில் நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.
அப்போது எந்த முன்னறிவிப்பும், சம்மனும் இல்லாமல் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் முறையிடும்படி அறிவுறுத்தினர். மனு தாக்கல் நடைமுறை முடிவடைந்தால் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மறுபக்கம் முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடனும், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பிரியா
அமலாக்கத் துறை விசாரணை என்றால் நெஞ்சு வலி வருமா?: ஜெயக்குமார் கேள்வி!